ஐபிஎல் போட்டி : 25 ஆயிரம் ரசிகர்களுக்கு ரூ. 500 க்கு டிக்கெட் - டேவிட் வார்னர்


ஐபிஎல் போட்டி : 25 ஆயிரம் ரசிகர்களுக்கு ரூ. 500 க்கு டிக்கெட் - டேவிட் வார்னர்
x
தினத்தந்தி 12 March 2019 11:23 AM GMT (Updated: 2019-03-12T16:53:34+05:30)

12-வது ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்போவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இதை அந்த அணியின் வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு தான் அணிக்குள் இடம் பெறுவதை உறுதி செய்து அணி நிர்வாகத்தின் இந்த செய்தியை ட்விட்டரில் வார்னர் பகிர்ந்துள்ளார்.

வரும் 23-ம் தேதி 12-வது ஐபிஎல் ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் 29-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது சன் ரைசர்ஸ் அணி.
 
சொந்த மண்ணில் நடக்கும் முதல் ஆட்டத்தைக் காண வரும் ரசிகர்களில் 25 ஆயிரம் பேருக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்படும் என்று சன் ரைசர்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை 13-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஆன்லைனிலும், நேரடியாகவும் தொடங்குகிறது.

இதைக் குறிப்பிட்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். 

அதில், " நான் டேவிட் வார்னர் பேசுகிறேன், அனைத்து ஆரஞ்ச் ரசிகர்களுக்கும் சிறப்புச் செய்தியை சொல்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அன்பையும், ஆதரவையும் வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி. எங்களின் ரசிகர்களுக்கு நாங்கள் நன்றியை திருப்பி அளிக்கும் தருணம். 25 ஆயிரம் ரசிகர்களுக்கு முதல் நாள் ஆட்டத்தைக்காண 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்க சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முக்கியக் காரணமாக அமைந்தார். 17 ஆட்டங்களில் ஆடிய வார்னர் 848 ரன்கள் குவித்தார்.


Next Story