ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி - தொடரை பறிகொடுத்தது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி - தொடரை பறிகொடுத்தது
x
தினத்தந்தி 13 March 2019 11:30 PM GMT (Updated: 13 March 2019 10:50 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் 2-3 என்ற கணக்கில் தாரைவார்த்தது.

புதுடெல்லி,

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் இரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹல், லோகேஷ் ராகுல் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெரேன்டோர்ப்புக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் லயன் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் இந்த தடவையும் தங்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். வேகம் இல்லாத (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவே இல்லை. அதற்கு ஏற்ப நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் (14.3 ஓவர்) எடுத்து பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 27 ரன்களில் (43 பந்து, 4 பவுண்டரி) ஜடேஜாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் நிலைத்து நின்று ஆடி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய கஜாவா தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். தனது முதலாவது சதத்தையும் அவர் இந்த தொடரில் தான் அடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் (32.5 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை எளிதில் தாண்டும் போலவே தோன்றியது. இந்த சூழலில் கவாஜாவின் (100 ரன், 106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை புவனேஷ்வர்குமார் சாய்த்தார். அடுத்து வந்த ‘அதிரடி மன்னன்’ மேக்ஸ்வெல் 1 ரன்னில் நடையை கட்டினார். அதன் தொடர்ச்சியாக ஹேன்ட்ஸ்கோம்ப் (52 ரன்), முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஆஷ்டன் டர்னர் (20 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மற்றும் மேலும் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

இதனால் 46 ஓவர்களில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 230 ரன்களுடன் தடுமாறியது. இந்திய பவுலர்கள், அவர்களை 250 ரன்னுக்குள் முடக்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி கட்டத்தில் நமது பவுலர்கள் கொஞ்சம் சொதப்பி விட்டனர். குறிப்பாக முதல் 8 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது 9-வது ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கினார். இதில் ஒரு பந்தை ‘ஓவர்த்ரோ’ செய்து அது பவுண்டரிக்கு ஓடியதும் அடங்கும். கம்மின்ஸ் (15 ரன்), ஜெயே ரிச்சர்ட்சன் (29 ரன், 21 பந்து, 3 பவுண்டரி) அளித்த கணிசமான பங்களிப்பு அந்த அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவியது.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. தவான் 12 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த இந்திய கேப்டனும், உள்ளூர் நாயகனுமான விராட் கோலியும் அதிக நேரம் இருப்பு கொள்ளவில்லை. மிதவேகப்பந்து வீச்சாளர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆப்-சைடுக்கு வெளியே சற்று எழும்பிய நிலையில் வீசிய பந்தில் கோலி (20 ரன், 22 பந்து, 2 பவுண்டரி) விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு பக்கம் போராட, இன்னொரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லயனும், ஆடம் ஜம்பாவும் இந்தியாவுக்கு கடும் குடைச்சல் கொடுத்தனர்.

ஒரே நம்பிக்கையாக இருந்த துணை கேப்டன் ரோகித் சர்மா அரைசதத்தை (56 ரன், 89 பந்து, 4 பவுண்டரி) கடந்த நிலையில், ஜம்பாவின் பந்து வீச்சில் இறங்கி வந்து சிக்சர் அடிக்க முற்பட்ட போது, பேட்டு கையை விட்டு நழுவி பறந்தது. அதற்குள் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி அவரை ஸ்டம்பிங் செய்தார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும் (0) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 136 ரன்களுடன் (28.5 ஓவர்) பரிதாபமாக தள்ளாடிக்கொண்டிருந்தது. பல ரசிகர்கள் வெறுப்பில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இந்த சிக்கலான நேரத்தில் கேதர் ஜாதவும், புவனேஷ்வர்குமாரும் இணைந்து அணியை வீழ்ச்சியில் இருந்து ஓரளவு நிமிர வைத்தனர். புவனேஷ்வர்குமார் இரண்டு பிரமாதமான சிக்சர் விளாசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இவர்கள் ஆடிய விதத்தின் மூலம் சற்று நம்பிக்கை துளிர் விட்டது. அந்த துளிரை கம்மின்ஸ் நறுக்கினார். ஸ்கோர் 223 ரன்களாக உயர்ந்த போது, புவனேஷ்வர்குமார் (46 ரன், 54 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் கேதர் ஜாதவும் (44 ரன், 57 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆக, ஆட்டம் முழுமையாக ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.

வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு எழுச்சி பெற்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பையை சொந்தமாக்கியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அந்த தோல்விக்கு இப்போது ஆஸ்திரேலியா வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்துவிட்டது.

‘வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதியான அணி’ - கோலி

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது எட்டக்கூடிய இலக்கு என்று உறுதியாக நினைத்தோம். ஆனால் கடைசியில் அவர்கள் வெற்றிவாய்ப்பை பறித்து விட்டனர். கடைசி கட்டத்தில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம். ஒன்று அல்லது 2 ஓவர்கள் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்த தொடரை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியினர் வெற்றி வேட்கை, உத்வேகம், சாதிக்கும் முனைப்புடன் ஆடினர். நெருக்கடிமான தருணத்தில் தைரியமாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கும், தொடரை கைப்பற்றுவதற்கும் அவர்கள் தகுதியான அணி தான். ஒரு வகையில் இது போன்ற தோல்விகள் நல்லது தான். உலக கோப்பைக்கு முன்பாக தவறுகளை சரி செய்து கொள்வதற்கு இது உதவும்’ என்றார்.

8 ஆயிரம் ரன்களை கடந்தார், ரோகித் சர்மா

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 31-வது வீரர், இந்திய அளவில் 8-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ரோகித் சர்மா இதுவரை 206 ஆட்டங்களில் விளையாடி 22 சதம், 41 அரைசதத்துடன் 8,010 ரன்கள் எடுத்துள்ளார்.

* இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி 9-வது முறையாக நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடி அதில் வென்ற 5-வது தொடர் இதுவாகும்.

* 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு அணி 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்து அதன் பிறகு எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்துவது இது 4-வது நிகழ்வாகும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா (2 முறை), வங்காளதேசம் ஆகிய அணிகள் இச்சாதனையை செய்துள்ளன. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

* சொந்த மண்ணில், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தது இது தான் முதல்முறையாகும்.

* இந்த தொடரில் 2 சதம், 2 அரைசதத்துடன் மொத்தம் 383 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இரண்டையும் தட்டிச் சென்றார். இதே போல் பந்து வீச்சில் முத்திரை பதித்த ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 14 விக்கெட்டுகளுடன் முதலிடம் பெற்றார்.


Next Story