நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து


நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில் மயிரிழையில் தப்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து
x
தினத்தந்தி 16 March 2019 12:05 AM GMT (Updated: 16 March 2019 12:05 AM GMT)

நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மயிரிழையில் தப்பினர். வங்காளதேசம்-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

கிறைஸ்ட்சர்ச்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்க இருந்தது. இதையொட்டி பயிற்சியில் ஈடுபட வங்காளதேச வீரர்கள் நேற்று ஸ்டேடியத்திற்கு சென்றனர். அந்த சமயம் லேசாக மழை பெய்ததால் அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி விட்டு வரலாம் என்று வங்காளதேச பொறுப்பு கேப்டன் மக்முதுல்லா சக வீரர்களிடம் கூறினார். இதையடுத்து வங்காளதேச வீரர்கள், பயிற்சி உதவியாளர்கள் என்று 17 பேர் பிற்பகலில் பஸ்சில் மசூதிக்கு புறப்பட்டனர்.

அந்த பகுதியை சென்றடைந்ததும் சில வீரர்கள், உதவியாளர்கள் பஸ்சிலேயே இருந்தனர். குறிப்பிட்ட வீரர்கள் தொழுகை நடத்த மசூதியை நோக்கி நடந்து சென்றனர். அருகே சென்ற போது அங்கு பயங்கரமான துப்பாக்கி சுடும் சத்தமும், அலறல் சத்தமும் கேட்டது. இதனால் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்து உஷாரான வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். “காப்பாற்றுங்கள்.... போலீசுக்கு தகவல் கொடுங்கள்’ என்று கூச்சலிட்டனர். பிறகு பஸ்சில் இருந்த சக வீரர்களிடம் இது பற்றி தெரியப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு அருகில் இருந்த மைதானத்திற்கு ஓடினர். அங்கு தங்களது ஓய்வறையில் பதுங்கிக்கொண்டனர்.

சிறிது நேரத்திற்கு பிறகே பயங்கரவாதி மசூதியில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதும், ஏராளமானோர் உயிரிழந்ததும் தெரியவந்தது. ஆனாலும் அதிர்ச்சியில் உறைந்து போன வங்காளதேச வீரர்கள் ஒருவித மிரட்சியுடனே காணப்பட்டனர்.

பிறகு பலத்த பாதுகாப்புடன் வங்காளதேச வீரர்கள் ஓட்டலுக்கு திரும்பினர். பாதுகாப்பு கருதி ஓட்டலை விட்டு வெளியே வரக்கூடாது என்று வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் எதிரொலியாக கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்க இருந்த 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக வங்காளதேசம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்தன. இதனால் இந்த டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றதோடு முடிவுக்கு வருகிறது.

வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து எங்களை அல்லா காப்பாற்றி விட்டார். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இது போன்ற சம்பவத்தை மீண்டும் ஒரு போதும் பார்க்க விரும்பவில்லை. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் டுவிட்டரில், ‘துப்பாக்கி சூட்டில் இருந்து ஒட்டுமொத்த அணியும் தப்பியிருக்கிறது. இது ஒரு பயங்கரமான அனுபவம்’ என்று கூறியுள்ளார்.

வங்காளதேச அணியின் உயர் செயல்பாட்டு தொழில்நுட்ப ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன் கூறும் போது ‘என்ன நடக்கிறது என்பதே எங்களுக்கு முதலில் புரியவில்லை. இது போன்ற கொடூர சூழலில் சிக்கும் போது மூளையே நமக்கு செயலிழந்து விடும். அப்படி தான் நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். பதற்றத்தில் இதயதுடிப்பும் எகிறியது’ என்றார். இவர் மும்பையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார்.

‘திரில்’ அனுபவம் குறித்து வங்காளதேச அணியின் மேலாளர் காலித் மசூத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பவம் நடக்கும் போது நாங்கள் மசூதிக்கு மிக அருகில் சென்று விட்டோம். கிட்டத்தட்ட 50 யார்டு தூரத்தில் (150 அடி) தான் இருந்தோம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 நிமிடங்களுக்கு முன்பாக அங்கு சென்றிருந்தால், அனேகமாக துப்பாக்கி சூட்டின் போது நாங்களும் மசூதிக்குள் தான் இருந்திருப்போம். அதன் பிறகு இது மிகப்பெரிய சம்பவமாக மாறியிருக்கும். கடவுளின் கருணையால் துப்பாக்கி சூட்டில் சிக்கவில்லை. ஆனால் சினிமா காட்சியை நேரில் பார்ப்பது போல் இருந்தது.

வீதியில் ரத்தக்கறைகளுடன் சிலர் ஓடி வருவதை கண்டு திகைத்து போனோம். அடுத்த 8-10 நிமிடங்களுக்குள் நாங்கள் அனைவரும் பஸ்சை அடைந்து விட்டோம். தாக்குதலில் இருந்து தப்பிக்க பஸ்சுக்குள் படுத்துக் கொண்டோம். ஆனால் பயங்கரவாதிகள் பஸ்சுக்குள் நாங்கள் இருப்பதை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாகி விடும் என்று கருதிய நாங்கள் பஸ்சை விட்டு இறங்கி நேராக ஸ்டேடியத்திற்கு செல்வது என்று முடிவு எடுத்து தப்பினோம்.

இவ்வாறு அவர் கூறினார். வங்காளதேச வீரர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகிறார்கள்.

நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு விளையாட்டு பிரபலங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிதாபப்படுகிறேன். வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அது தான் எனது ஒரே சிந்தனை’ என்று கூறியுள்ளார். தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், மஹேலா ஜெயவர்த்தனே, கெவின் பீட்டர்சன், மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதலால் கிரிக்கெட் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. 2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சில இலங்கை வீரர்கள் லேசான காயத்துடன் தப்பிபிழைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த தொடரை கைவிட்டு இலங்கை வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இப்போது பெரும்பாலான அணிகள் பாகிஸ்தானுக்கு செல்வதில்லை.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக நியூசிலாந்து அணி தங்களது பயணத்தை ரத்து செய்த நிகழ்வும் உண்டு.

Next Story