கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றி + "||" + Test match; Afghanistan defeated Ireland for the first time

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆப்கானிஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்தது.
டேராடூன்,

ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 172 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணி 314 ரன்களும் எடுத்தன. 142 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 288 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆன்டி பால்பிர்னி (82 ரன்), கெவின் ஓ பிரையன் (56 ரன்) அரைசதம் விளாசினர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.


பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து இருந்தது. முகமது ஷசாத் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இசானுல்லா 16 ரன்னுடனும், ரஹ்மத் ஷா 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இசானுல்லா, ரஹ்மத் ஷா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அணியின் ஸ்கோர் 144 ரன்னை எட்டிய போது ரஹ்மத் ஷா (72 ரன்) ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இசானுல்லா, ரஹ்மத் ஷா இணை 139 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த முகமது நபி 1 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார்.

ஆப்கானிஸ்தான் அணி 47.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இசானுல்லா 65 ரன்னுடனும், ஹஸ்மத்துல்லா ஷகிதி 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆப்கானிஸ்தான் அணி, கடந்த ஆண்டு (2018) பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்கிய இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனது. அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது. அடுத்து 9 மாதத்துக்கு பிறகு 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விரைவில் முதல் வெற்றியை பெற்ற அணிகள் பட்டியலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் (2-வது டெஸ்டில் முதல் வெற்றி) ஆகியவற்றுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணி 2-வது இடத்தை பிடித்தது. இந்த வகையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி கண்டு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக அணியாக களம் கண்ட அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஆஸ்கர் ஆப்கன் அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது எங்கள் கனவாகும். எங்களுடைய 2-வது டெஸ்ட் போட்டியிலேயே முதல் வெற்றியை பெற்றுள்ளோம். இது ஆப்கானிஸ்தான் அணிக்கும், மக்களுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சில் எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்து வீசினார்கள்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு கருத்து தெரிவிக்கையில், ‘150 ரன்களுக்கு உட்பட்ட இலக்கை எட்டவிடாமல் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. முதல் இன்னிங்சில் நாங்கள் போதிய ஸ்கோர் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும். ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடியது. அவர்கள் வெற்றிக்கு தகுதி படைத்தவர்கள். 5 அறிமுக வீரர்களுடன் களம் கண்டு எங்கள் அணி ஆடிய விதம் பெருமை அளிக்கிறது’ என்றார்.