நஷ்டஈடு வழக்கில் தோல்வி: ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம்’ - இஷான் மணி தகவல்


நஷ்டஈடு வழக்கில் தோல்வி: ‘இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம்’ - இஷான் மணி தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 7:12 PM GMT)

நஷ்டஈடு வழக்கில் தோல்வி தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்கிவிட்டோம் என இஷான் மணி தெரிவித்துள்ளார்.

கராச்சி,

இந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இரு நாடுகள் இடையிலான போட்டி தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) பிரச்சினை தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த ஐ.சி.சி. தீர்ப்பாய கமிட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் தோல்வியை சந்தித்ததால் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.

Next Story