கிரிக்கெட்

‘ஒரு நாள், 20 ஓவர் போட்டியில் எனது சாதனை மோசமானது கிடையாது’ - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதங்கம் + "||" + "One day, 20 overs matches my record is not bad" - says spinner Ashwin

‘ஒரு நாள், 20 ஓவர் போட்டியில் எனது சாதனை மோசமானது கிடையாது’ - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதங்கம்

‘ஒரு நாள், 20 ஓவர் போட்டியில் எனது சாதனை மோசமானது கிடையாது’ - சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதங்கம்
ஒரு நாள், 20 ஓவர் போட்டியில் எனது சாதனை மோசமானது கிடையாது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த 32 வயதான ஆர்.அஸ்வினுக்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் தங்கள் இடத்தை கெட்டியாக தக்கவைத்து கொண்டதால், கைவிரலை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் அஸ்வினுக்கு வாய்ப்பு வரவில்லை. ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனான ஆர்.அஸ்வின் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு நாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எனது பந்து வீச்சு சாதனை ஒன்றும் மோசமானது கிடையாது. நவீன கால ஒரு நாள் போட்டிக்கு மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்ற கருத்தால் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.


எனது கடைசி ஒரு நாள் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினேன். எனது கடந்த கால கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் திறமை அடிப்படையில் நான் வெளியில் இருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஒரு வடிவிலான கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டும் நிபுணத்துவம் மிக்கவராக என்னை மாற்றி கொள்ள விரும்பவில்லை. என்னால் சிறப்பாக செய்ய முடியக்கூடியதை எதிர்நோக்கி செல்கிறேன். பேட்ஸ்மேனை நோக்கி பந்தை சுழல வைக்க வேண்டும். அல்லது பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை திருப்ப வேண்டும். இதனை தவிர வேறு ஒன்றையும் கூடுதலாக செய்ய முடியாது. நான் எனது திறமையை வளர்த்து வருகிறேன். எனது பந்து வீச்சில் புதுமையை புகுத்தி இருக்கிறேன். நான் கேலரியில் இருக்கும் ரசிகர்களுக்காவோ?, சாதனைகளுக்காவோ, அணியில் இடம் பிடிப்பதற்காகவோ? ஒருபோதும் விளையாடியது கிடையாது. எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடுகிறேன். இந்த விளையாட்டு தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இப்போதும் கூட கிளப், தெரு கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.