இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னே கேப்டன்?


இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னே கேப்டன்?
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-20T01:30:39+05:30)

இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னேவை கேப்டனாக நியமிப்பது குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

கொழும்பு,

முன்னணி வீரர்களின் ஓய்வும், புதுமுக வீரர்களின் தடுமாற்றமும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஓரிரு ஆண்டுகளாக சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியே மிஞ்சியது. பரிசோதனை முயற்சியாக கேப்டன் பதவி மலிங்காவிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவரது கேப்டன்ஷிப் குறித்து அணி நிர்வாகம் திருப்தி அடையவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் வேளையில் கேப்டனை மாற்றுவது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. சமீபத்தில் டெஸ்ட் தொடருக்கு திமுத் கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இலங்கை அணி தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. அங்கு டெஸ்ட் தொடரை வசப்படுத்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பையும் பெற்றது.

இதனால் கருணாரத்னேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் சிந்திக்க தொடங்கியுள்ளது. ‘டெஸ்ட் வீரர்’ என்று முத்திரை குத்தப்பட்ட கருணாரத்னே 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 30 வயதான கருணாரத்னே இதுவரை 17 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 190 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நான் தான் கேப்டன் என்று எதுவும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்னிடம் தேர்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் கிளப் போன்ற தொழில்முறை போட்டியை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அதற்கு தயாராவதற்கு பயிற்சி முகாம்களில் பங்கேற்க வேண்டி இருக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தின் கவுண்டி அணியான ஹாம்ஷைர் அணிக்கு நான் விளையாட முடியாமல் போகலாம்’ என்றார்.

கருணாரத்னே பொதுவாக பேட்டிங்கில் அதிரடி காட்டுவதில்லை. கொஞ்சம் பொறுமையாக செயல்படக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். சமீப காலமாக இலங்கை அணி ஒரு நாள் போட்டிகளில் 50 ஓவர்களை முழுமையாக தாக்குப்பிடிப்பதில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுப்பது அடிக்கடி நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட 4 ஆட்டங்களில் 50 ஓவர்களுக்கு முன்பாக சுருண்டு போனது. இதனால் அவரது நிதான ஆட்டம் அணிக்கு அவசியமானதாக இருக்கும். அது மட்டுமின்றி அனுபவம் இல்லாத வீரர்களை கொண்டு கடினமான தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சாதித்தது தேர்வாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

கருணாரத்னேவை தவிர, மலிங்கா, மேத்யூஸ், சன்டிமால் ஆகியோரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.


Next Story