ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா


ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
x
தினத்தந்தி 22 March 2019 11:30 PM GMT (Updated: 22 March 2019 7:56 PM GMT)

இந்த கோடை காலம், தேர்தல் மற்றும் ஐ.பி.எல். திருவிழாவினால் களைக்கட்டத் தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இன்று முதல் அடுத்த 50 நாட்களுக்கு ஐ.பி.எல். ஜூரம் ஆட்டுவிக்கப்போகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது முதல் இந்த போட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு சினிமா படம் பார்ப்பது போன்று 3 மணி நேரத்தில் அதுவும் சில சமயம் திரில்லிங்காகவும், சுவாரஸ்யமாகவும் அமைவதால் இந்த சரவெடி போட்டிக்கு உள்ள மவுசே தனி தான்.

இன்று தொடங்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாய்ப்பில் முதன்மையான இடத்தில் உள்ளது. இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். 2 ஆண்டு தடை காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த போது, சென்னை அணி எழுச்சி பெறுமா? என்ற சந்தேகம் பொதுவாக இருந்தது. ஆனால் டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. கடந்த சீசனில் சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வசப்படுத்தியது என்றால், அதற்கு வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம் என்றால் மிகையாகாது. சென்னை அணியில் 8 வீரர்கள் ஆட்டநாயகன் விருது பெற்று வியக்க வைத்தனர். பெரும்பாலான வீரர்கள் அணியில் அப்படியே தொடர்வதால் சென்னை அணி இந்த முறையும் நம்பிக்கையுடன் காணப்படுகிறது.

2016-ம் ஆண்டு சாம்பியனும், கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த அணியுமான ஐதராபாத் சன்ரைசர்சும் மிரட்டுவதற்கு காத்திருக்கிறது. ஐதராபாத் அணியின் பிரதான பலம் பந்து வீச்சு தான். ‘ஸ்விங்’ செய்வதில் வல்லவரான புவனேஷ்வர்குமார், சுழல் ஜாலம் காட்டக்கூடிய ரஷித்கான், கலீல் அகமது, முகமது நபி, ஷகிப் அல்-ஹசன், டி.நடராஜன் உள்ளிட்டோர் பந்து வீச்சில் வலு சேர்க்கிறார்கள். கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர், டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, கப்தில், யூசுப் பதான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே என்று தரமான பேட்ஸ்மேன்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் தோள்பட்டை காயத்தில் சிக்கிய கேப்டன் வில்லியம்சன் தொடக்க ஆட்டங்களில் ஆடுவதில் சிக்கல் நிலவுகிறது.

ஐ.பி.எல்.-ல் அதிக வெற்றிகளை (97 வெற்றி) குவித்த அணியான 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் வலுவான அணியாகவே படையெடுக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள், பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, இவின் லீவிஸ், குயின்டான் டி காக், மயங்க் மார்கண்டே ஆகியோர் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களாக வலம் வருகிறார்கள். ஒரு காலத்தில் ரூ.16 கோடிக்கு ஏலம் போன யுவராஜ்சிங் இந்த சீசனில் மும்பை அணிக்காக ரூ.1 கோடிக்கு ஒதுக்கப்பட்டார். இது அவர் கால்பதிக்கும் 6-வது அணியாகும்.

ஒவ்வொரு முறையும் பலம் வாய்ந்த அணியாக இறங்குவதும், அதன் பிறகு தடுமாறுவதும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு வாடிக்கையாகும். ஐ.பி.எல். உதயமானதில் இருந்து மாற்றமின்றி ஒரே அணியில் நீடிக்கும் ஒரே வீரரான விராட் கோலி, மைதானத்தின் 360 டிகிரி கோணத்திலும் பந்தை விரட்டக்கூடிய டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் பெங்களூரு அணியின் தூண்கள் ஆவர். 3 முறை இறுதிசுற்றுக்கு முன்னேறியும் அந்த அணிக்கு மகுடம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஹெட்மயர், ஷிவம் துபே, டிம் சவுதி, உமேஷ் யாதவ், ஸ்டோனிஸ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், நாதன் கவுல்டர்-நிலே உள்ளிட்ட துடிப்பான வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். நீண்ட கால ஏக்கத்துக்கு முடிவு கட்ட துடிக்கும் கோலி சகாக்களின் கனவு நனவாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டில் 253 பவுண்டரியும், 130 சிக்சரும் அடித்தது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தரும் பணியில் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், முக்கியமானவர். கடந்த ஆண்டு இலக்கை ‘சேசிங்’ செய்த 6 ஆட்டங்களில் அவர் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐ.பி.எல்.-ல் ஜொலித்தால், உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்பதால் இந்த முறை அவரது செயல்பாடு உன்னிப்பாக நோக்கப்படும். கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, ஆந்த்ரே ரஸ்செல், சுப்மான் கில் என்று மலைக்க வைக்கும் பேட்ஸ்மேன்களும், சுனில் நரின், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா போன்ற சுழலில் அச்சுறுத்தக்கூடியவர்களும் கொல்கத்தா அணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சு தான் அந்த அணிக்கு சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ‘பிளே-ஆப்’ சுற்று வரை முன்னேறிய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எடுத்துக் கொண்டால், ஸ்டீவன் சுமித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் எந்த நிலைமையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சாமர்த்தியசாலிகள் ஆவர். மனன் வோரா, ஜெய்தேவ் உனட்கட், ஆஷ்டன் டர்னர், ஜோப்ரா ஆர்ச்சர், சஞ்சு சாம்சன் ஆகியோரும் ராஜஸ்தான் அணிக்கு வலுவூட்டுகிறார்கள். பொதுவாக பார்த்தால், ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்ததாக தெரிந்தாலும் அந்த அணியில் இடம் பெற்றுள்ள 8 வெளிநாட்டு வீரர்களில் 6 பேர் உலக கோப்பைக்காக ஐ.பி.எல்.-ன் கடைசி கட்டத்தில் தாயகம் திரும்பிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு நடக்கும் போது இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் அணி நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆண்டில் முதல் 9 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றது. ஆனால் கடைசி 5 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று தடம்புரண்ட அந்த அணி ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பறிகொடுத்து 7-வது இடத்துக்கு பின்தங்கியது. இதில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 545 ரன்கள் திரட்டினர். கடந்த ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஜோடி இவர்கள் தான். லோகேஷ் ராகுல் ஒரு ஆட்டத்தில் 14 பந்தில் அரைசதம் நொறுக்கி புதிய சாதனை படைத்ததும் அடங்கும். இவர்கள் தான் பஞ்சாப் அணியின் அச்சாணியாக விளங்குகிறார்கள். சிறப்பான ஆல்-ரவுண்டர்கள் இல்லாத குறை, சரியான கலவையில் அணி அமைவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அனுபவம் வாய்ந்த அஸ்வின், புதிரான சுழற்பந்து வீச்சாளர்கள் முஜூப் ரகுமான், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சுழலில் முத்திரை பதிக்கலாம். ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி கேரம், கூக்ளி, லெக் பிரேக் உள்பட 7 விதமாக பந்து வீசக்கூடியவர். ஐ.பி.எல்.-ல் தனது ‘கன்னி’ பயணத்தை தொடங்க இருக்கும் அவர், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரை அணிக்காக சிக்கனமாக (ஓவருக்கு 4.7 ரன்) பந்து வீசி அசத்தியது நினைவு கூரத்தக்கது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் அடியெடுத்து வைக்கிறது. முந்தைய 11 தொடர்களிலும் பங்கேற்று இறுதிப்போட்டியை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த சோகமும் டெல்லி (91 தோல்வி) அணிக்கே உரித்தானது. கடந்த சீசனில் 5 வெற்றியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

தலைமை பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் பொறுப்பு ஏற்பு, ஆலோசகராக சவுரவ் கங்குலி நியமனம், 11 ஆண்டுகளுக்கு பிறகு ஷிகர் தவான் சொந்த ஊர்அணிக்கு திரும்பியது இவை எல்லாம் டெல்லி அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது ஓரிரு வாரங்களிலேயே தெரிந்து விடும். அதே சமயம் இளம் சூரர்கள் ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் ஆட்டம் அந்த அணியில் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்.

மொத்தத்தில், ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் புதிய வீரர்களை எடுத்து தங்களை பட்டை தீட்டியிருப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

ஐ.பி.எல். என்றாலே ரன்மழையைத்தான் அனைவரும் விரும்புவார்கள். கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர், வார்னர், கப்தில், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ஷேன் வாட்சன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ஜோஸ் பட்லர், ரஸ்செல், கிறிஸ் மோரிஸ்.... இப்படி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டக்கூடிய மெகா பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது.

கடந்த ஆண்டில் மொத்தம் 872 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஐ.பி.எல். அது தான். ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கையை தாண்ட முடியுமா? என்பது சந்தேகம் தான்.

ஏனெனில், மார்ச் 31-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகே ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு வருகிறார்கள். இதே போல் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் (ஐதராபாத் அணி), ஸ்டீவன் சுமித் (ராஜஸ்தான்) ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை காலம் வருகிற 28-ந்தேதி தான் நிறைவடைகிறது. அதனால் ஒரு சில லீக் ஆட்டங்களில் அவர்களால் விளையாட முடியாது. மேலும் உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு தேர்வாகும் வீரர்களை ஐ.பி.எல்.-ல் இருந்து மே 1-ந்தேதி திரும்ப பெற்று விடுவோம் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே கூறியுள்ளன. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் மே முதல் வாரம் வரை விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு வெளிநாட்டை சேர்ந்த குறிப்பிட்ட வீரர்கள் அரைகுறையாகத்தான் ஐ.பி.எல்.-ல் விளையாட உள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று முன்னணி வீரர்கள் பாதியில் தாயகம் திரும்புவது சகஜம் தான். அதனால் போட்டியில் பரபரப்போ, உற்சாகமோ தளர்ந்து விடப்போவதில்லை. மொத்தம் 60 ஆட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகிறது.!

செஞ்சுரியை நோக்கி டோனி....

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்வதில் செஞ்சுரியை நோக்கி பயணிக்கிறார், டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் (இந்த அணி தற்போது கிடையாது) அணிகளுக்காக அவர் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதுவரை 159 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ள டோனி 94-ல் வெற்றியும், 64-ல் தோல்வியும் கண்டுள்ளார். ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. சென்னை சூப்பர் கிங்கின் ‘தல’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அவர் இந்த சீசனில் நிச்சயம் 100-வது வெற்றியை எட்டும் முதல் கேப்டன் என்ற மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன்களில் 2-வது இடத்தில் டெல்லி, கொல்கத்தா அணிக்காக ஆடிய கவுதம் கம்பீர் (71-ல் வெற்றி, 57-ல் தோல்வி, ஒரு ‘டை’) உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் இதுவரை 47 பேர் கேப்டன் பதவியை அலங்கரித்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப், டெல்லி அணிகள் தலா 11 பேரை கேப்டனாக்கி இருக்கிறது.

டக்-அவுட் சோதனையும்... சதத்தில் சாதனையும்....!

* ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 52 சதங்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கொல்கத்தா, பெங்களூரு அணிக்காக விளையாடி தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் ஐக்கியமாகியுள்ள கிறிஸ் கெய்ல் 6 சதங்கள் அடித்துள்ளார். இதில் அவர் 30 பந்துகளில் மின்னல்வேகத்தில் அடித்த சதமும் அடங்கும். விராட் கோலி (பெங்களூரு), ஷேன் வாட்சன் (சென்னை) தலா 4 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

* குஜராத் லயன்ஸ், பஞ்சாப், மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடி ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அதிக ‘மெய்டன்’ ஓவர்கள் வீசியதில் முதலிடம் வகிக்கிறார். 119 ஆட்டத்தில் ஆடி 420.4 ஓவர்கள் பந்து வீசியுள்ள அவர் அவற்றில் 14 ஓவர்களில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக்கி இருக்கிறார்.

* அதிகமான ‘டாட்’ பந்துகளை (பேட்ஸ்மேன் ரன் எடுக்காமல் விரயமாக்கிய பந்து) வீசிய பெருமையை முன்பு மும்பை அணியில் ஆடி இப்போது சென்னை சூப்பர் கிங்சுக்காக களம் காணும் ஹர்பஜன்சிங் கொண்டுள்ளார். அவர் 149 ஆட்டங்களில் 518.2 ஓவர்கள் பவுலிங் செய்து அதில் 1,128 பந்துகளில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. அதே சமயம் அதிக முறை ‘டக்-அவுட்’ ஆன மோசமான சாதனையும் அவரது வசமே உள்ளது. ஹர்பஜன்சிங் 13 முறை ரன்னின்றி வீழ்ந்துள்ளார்.

* ஐ.பி.எல்.-ல் 17 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளன. டெக்கான், டெல்லி, ஐதராபாத் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்து இருக்கிறார். யுவராஜ்சிங் 2 முறை இச்சாதனையை செய்திருக்கிறார்.

* ஐ.பி.எல்.-ன் முதலாவது ஆட்டத்திலும் (பெங்களூரு அணி), 500-வது ஆட்டத்திலும் (டெல்லி அணி) அங்கம் வகித்த ஒரே வீரர் ஜாகீர்கான் ஆவார். இவ்விரு ஆட்டங்களிலும் அவரது அணி தோல்வியை தழுவியது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக அணிகளுக்காக பங்கேற்றவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச். ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 7 அணிகளுக்காக விளையாடியுள்ளார். உலக கோப்பையை மனதில் கொண்டு இந்த முறை அவர் ஐ.பி.எல். ஏலத்திற்கு வரவில்லை.

* கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்களை பறக்க விட்டது. ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் துவம்சம் செய்த அணி சென்னை தான்.

* அதிக போட்டிகளில் பங்கேற்றவர் (176 ஆட்டம்), அதிக கேட்ச் செய்த பீல்டர் (95 கேட்ச்) ஆகிய சிறப்புகளை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னகத்தே கொண்டுள்ளார்.

* அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர்களில் கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக் (94 கேட்ச், 30 ஸ்டம்பிங் என்று 124 பேரை அவுட் ஆக்கி இருக்கிறார்) முதலிடம் வகிக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர் டோனி (116 அவுட்) அடுத்த இடத்தில் உள்ளார்.

Next Story