கிரிக்கெட்

“தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம் + "||" + Ipl cricket Chennai Bowler Harbhajan Singh Fervently

“தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்

“தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்” சென்னை பவுலர் ஹர்பஜன்சிங் உருக்கம்
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
சென்னை,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தின் போக்கு தான் சொத்தையாக அமைந்து விட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவர்களில் 70 ரன்னில் சுருண்டது. பார்த்தீவ் பட்டேல் (29 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. சென்னை தரப்பில் மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த எளிய இலக்கையும் சென்னை அணி திக்கித் திணறி வெற்றி கண்ட விதம் குழுமியிருந்த ரசிகர்களை எரிச்சல் அடையச் செய்தது.


இந்த இலக்கை சென்னை அணி 17.4 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக ருசித்த 7-வது வெற்றி இதுவாகும்.

போட்டிக்கு பிறகு சேப்பாக்கம் ஆடுகளம் (பிட்ச்) குறித்து அதிருப்தி வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தன்மை எந்த மாதிரி ஒத்துழைக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை. இதே ஆடுகளத்தில் எங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது பந்து இந்த அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவான தன்மையுடன் இருக்கும் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. பந்து பேட்டுக்கு ஏதுவாக வரவில்லை. இது எனக்கு, 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டுக்குரிய ஆடுகளத்தை நினைவூட்டியது. ஆடுகளத்தன்மை ஒரே மாதிரியாக நீடித்தால், ரன் எடுப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தோம். இந்த ஆடுகளத்தை நிச்சயம் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும்’ என்றார்.

பெங்களுரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எந்த ஒரு அணியும் இந்த மாதிரியான தொடக்கத்தை விரும்பமாட்டார்கள். ஆனாலும் பீல்டிங்கில் வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளித்தது. குறைந்த இலக்கு என்றாலும் 18 ஓவர்கள் வரை ஆட்டத்தை நகர்த்தி சென்றோம்.

இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. 140 முதல் 150 ரன்கள் எடுத்தால் நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 110 முதல் 120 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை சுழற்பந்து வீச்சாளர் 38 வயதான ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘பந்து சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆனதால் ஆடுகளம் பேட்டிங்குக்கு கடினமாக இருந்தது உண்மை தான். ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இருந்ததாக சொல்ல முடியாது. ஒரு ஆடுகளத்தில் 170 அல்லது 180 ரன்கள் குவிக்கும் போது யாரும் புகார் கூறமாட்டார்கள். சுழற்பந்து வீச்சுக்கோ அல்லது வேகப்பந்து வீச்சுக்கோ ஆடுகளம் சாதகமாக இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் பிரச்சினை வந்து விடும். பந்து வீச்சாளர்களுக்குரிய பணியை மக்கள் மறந்து விடுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் சில நேரம் இது மாதிரி தடுமாறுவது இயல்பு தான். ஏனெனில் இது பேட்டுக்கும், பந்துக்கும் இடையிலான போட்டியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெங்களூரு வீரர்கள் அவசரகதியான சில ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இது 70 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல. பெங்களூரு பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் ஆடியிருந்தால் 120 ரன்கள் வரை எடுத்திருக்கலாம். ஆனாலும் இந்த ஆடுகளம் இந்த அளவுக்கு சுழலுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.

ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய சீருடையின் எண் 27. இன்றைய ஆட்டத்தில் எனது பந்து வீச்சு 4-0-20-3 என்று அமைந்தது. இதன் கூட்டுத்தொகை 27. எனது மகள் ஹினாயாவின் பிறந்த நாள் தேதி 27. இவையாவும் தற்செயல். ஆனால் நான் சம்பாதித்த உங்களோட அன்பும், ஆதரவும் இது போன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம். வெகு நாட்கள் கழித்து தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.