பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்


பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்
x
தினத்தந்தி 26 March 2019 10:32 AM GMT (Updated: 26 March 2019 10:32 AM GMT)

பட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.

ஜெய்ப்பூர், 

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது.

தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 47 பந்தில் 79 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்) , சர்பிராஸ்கான் 29 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், குல்கர்னி, கவுதம் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 43 பந்தில் 69 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 25 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். சாம்குர்ரான், முஜீபூர் ரகுமான், ராஜ்பூத் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஆட்டத்தின் 13-வது ஓவரில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை, பஞ்சாப் கேப்டனும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் ‘ரன் அவுட்’ செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வின் பந்து வீசும் போது பட்லர் கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அவரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்தார். ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியே வந்தால் ‘ரன் அவுட்’ செய்யலாம் என்ற விதி இருக்கிறது.

3-வது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டு பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பட்லர்-அஸ்வின் இடையே ஆடுகளத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அஸ்வினின் இந்த செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவர் செய்தது தவறு. கிரிக்கெட்டை அசிங்கப்படுத்தி விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. விதிகளை மீறவில்லை,  கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு, இது மாதிரியான செயல் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று வார்னர் சுமித் பந்தில் தில்லுமுல்லு செய்ததற்கும், அஸ்வின் செயலுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. பட்லர் ஆட்டம் இழந்த பிறகு ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நான் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவுமில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

'மன்கட்' முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை. இது இயல்பான ஒன்றாகும்.

நான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும். நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

Next Story