கிரிக்கெட்

விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அஜித் வடேகர் + "||" + Ajith Wadekar is an example of perseverance

விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அஜித் வடேகர்

விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அஜித் வடேகர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜித் வடேகர்.
இந்திய அணிக்கு தலைமைதாங்கிச்சென்ற அஜித் வடேகர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து நாட்டு அணிகளை அவர்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி கண்டவர். தன்னை ஒரு கிரிக்கெட் வீரர் ஏளனமாக பேசியதால் எடுத்த சபதம் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டியவர் அஜித் வடேகர். முயற்சிக்கு எடுத்துக்காட்டாக திகழும் அஜித் வடேகரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்வோம்...

1941-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மும்பையில் பிறந்தார் அஜித் வடேகர். பள்ளிப்படிப்பில் அஜித் சிறப்புடன் திகழ்ந்தார். குறிப்பாக கணிதப்பாடத்தில் இவர் ஆர்வமாக இருந்தார். இதையடுத்து தனது மகனை என்ஜினீயர் ஆக்க அவரது தந்தை விரும்பினார்.

பள்ளி நாட்களில் விடுமுறை தினங்களில் சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவது இவரது வழக்கம். அதுவும் அங்குள்ள சிவாஜி பூங்காவில் டென்னிஸ் பந்தை வைத்து கிரிக்கெட் ஆடுவது உண்டு. இதைத்தவிர அவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் பெரிய ஆர்வம் எதுவும் கிடையாது.

பள்ளிப்படிப்பு முடித்து மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியில் அஜித் சேர்ந்தார். ஒரு நாள் கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது அவருக்கு அறிமுகமான பலோ குப்தா என்ற மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி வீரரும் உடன் பயணம் செய்தார். இவர் இடது கை சுழல் பந்து வீச்சாளர் ஆவார். அப்போது அவர், ‘கல்லூரி கிரிக்கெட் அணியில் 12 வது நபராக விளையாட ஒரு ஆள் தேவை நீ வருகிறாயா?, இவ்வாறு விளையாடினால் அலவன்ஸ் ஆக 3 ரூபாய் கிடைக்கும்’ என்றார்.

அஜித் வடேகருக்கு கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வம் இல்லை. இருந்தாலும் அப்போது (1950-ம் ஆண்டில்) 3 ரூபாய் என்பது பெரிய தொகை. இது தவிர உணவு மற்றும் நொறுக்குத்தீனிகளும் இலவசமாக கிடைக்கும். இதையெல்லாம் அறிந்த அவர் விளையாட சம்மதித்தார். 12-வது வீரர் என்றால் கடினமாக விளையாட வேண்டியதில்லை. ஆடுகளத்தில் இருக்கும் வீரர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் மற்றும் குளிர்பானம் கொடுக்க வேண்டும், மாற்று வீரராக சில நேரங்களில் பீல்டிங் செய்ய வேண்டி இருக்கும். அவ்வளவு தான் என்று அஜித் வடேகர் நினைத்தார்.

போட்டி நடக்கும் நாளில் அஜித் வடேகர் தாமதமாக சென்றார். அப்போது அங்கிருந்து கல்லூரி அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஒருவர் அவரை கிண்டல் செய்தார். ``டேய் நீ எல்லாம் இலவசமாக கிடைக்கும் சாப்பாட்டிற்கும், அலவன்சுக்கும் தான் வருகிறாய், நிஜமாகவே கிரிக்கெட்டில் உனக்கு ஆர்வம் எதுவும் கிடையாது தானே'' என்று கிண்டல் செய்யும் வகையில் பேசினார்.

இந்த கிண்டல் பேச்சு அஜித் வடேகரின் தன்மானத்தை தட்டியெழுப்பியது. அந்த நிமிடத்தில் இருந்து கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது.

இதுபற்றி பின்னர் அஜித் வடேகர் கூறும்போது, ‘சாப்பாட்டுக்கும், அலவன்சுக்கும் தானே கிரிக்கெட் விளையாட வருகிறாய் என்ற விஷம் தோய்ந்த வார்த்தைகள் என் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. அந்தக்கணத்தில் நான் முடிவு எடுத்தேன். கடின உழைப்பின் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவது என்று சபதம் செய்தேன்’, என்றார்.

இந்த நிகழ்வுக்குப்பிறகு அஜித் வடேகர் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியில் இறங்கினார். அடுத்த ஆண்டு அவர் ரூயியா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கல்லூரி அணியில் இடம்பிடித்தார். பேட்டிங் மற்றும் பீல்டிங் துறைகளில் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். இதன் மூலம் கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டிகளிலும், பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளிலும் இவர் ரன்களை குவித்தார். இதையடுத்து மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணியிலும் வெகுவிரைவிலேயே இடம்பிடித்தார்.

1966-67-ம் ஆண்டு சர் கேரிபீல்ட் சோபர்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோதிய இந்திய அணியில் அஜித் வடேகர் இடம் பிடித்தார். அப்போது தொடங்கி 1974 வரை அவர் இந்திய அணிக்காக ஆடினார். சிறந்த பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்த அவர் பேட்டிங் வரிசையில் 3- வது வீரர் ஆக ஆடினார். இடது கை வீரர் ஆன இவர் தனது அபாரமான ஆட்டத்தால் ரன்களை குவித்துள்ளார். மேலும் பீல்டிங்கின் போது ‘ஸ்லிப்’ பகுதியில் நின்று அற்புதமான பல கேட்ச்களை பிடித்துள்ளார்.

1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுடன் விளையாடியது. இதில் இந்திய அணி இரண்டு நாட்டிலும் தொடரை வென்றது. இதன் மூலம் அன்னிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற முதல் தொடர் வெற்றி என்ற பெருமை பெற்றது. மிகப்பெரிய வெற்றி பெற்று திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பிராபோர்னே ஸ்டேடியம் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு வழிநெடுக கிரிக்கெட் ரசிகர்களும் மக்களும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். 1974-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் மீண்டும் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. இதில் இந்திய அணி மிக மோசமான தோல்வியைத்தழுவியது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து அஜித் வடேகர் விலகினார்.

அஜித் வடேகரின் திறமையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 1967-ம் ஆண்டு அர்ஜூனா விருதும் 1972-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்தது. 1990-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் மேனேஜராக இருந்து அணியை வழிநடத்தினார். 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி அவர் மரணம் அடைந்தார்.