ஜோஸ்பட்லரின் சர்ச்சைக்குரிய ரன்–அவுட்: அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்த எம்.சி.சி. திடீர் பல்டி


ஜோஸ்பட்லரின் சர்ச்சைக்குரிய ரன்–அவுட்: அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்த எம்.சி.சி. திடீர் பல்டி
x
தினத்தந்தி 28 March 2019 9:30 PM GMT (Updated: 28 March 2019 8:20 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த திங்கட்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது.

லண்டன், 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த திங்கட்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை (69 ரன்), மன்கட் முறையில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ‘ரன்–அவுட் செய்தார். பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு நகர்ந்த ஜோஸ்பட்லரை, அஸ்வின் ரன்–அவுட் செய்தது சர்ச்சையாக கிளம்பியது. அஸ்வின் ரன்–அவுட் செய்த விதம் சரியானது தான் என்று ஒரு தரப்பினரும், அஸ்வினின் செயல்பாடு விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். ‘தான் கிரிக்கெட் விதிகளின்படி தான் நடந்தேன்’ என்று அஸ்வின் விளக்கம் அளித்தார்.

கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் லண்டனை சேர்ந்த மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அஸ்வினின் செயல்பாடு சரியானது தான் என்று நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தனது முடிவில் இருந்து எம்.சி.சி. நேற்று திடீரென பல்டி அடித்துள்ளது. இது குறித்து எம்.சி.சி. சட்ட விதிகளின் மேலாளர் பிராசெர் ஸ்டீவர்ட் அளித்த பேட்டியில், ‘அஸ்வின் மன்கட் முறையில் ரன்–அவுட் செய்த சம்பவத்தை நாங்கள் மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அஸ்வினின் செயல்பாடு விளையாட்டு உத்வேகத்துக்கு உகந்ததாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட பந்தை வீச வந்த போது அஸ்வின் கூடுதல் நேரம் எடுத்து கொண்டது தெளிவாக தெரிகிறது. பந்து அஸ்வின் கையில் இருந்து வெளியேறி விட்டது என்று நினைத்து தான் ஜோஸ்பட்லர் நகருகிறார். அதற்கு முன்பு வரை அவர் கிரீசில் தான் இருந்தார்’ என்று தெரிவித்தார்.


Next Story