கிரிக்கெட்

பீல்டிங் விதிமீறலால் தப்பித்த ரஸ்செல்: கவனக்குறைவால் வெற்றி வாய்ப்பு பறிபோய்விட்டது பஞ்சாப் பயிற்சியாளர் வேதனை + "||" + The negligence was lost by chance Punjab trainer

பீல்டிங் விதிமீறலால் தப்பித்த ரஸ்செல்: கவனக்குறைவால் வெற்றி வாய்ப்பு பறிபோய்விட்டது பஞ்சாப் பயிற்சியாளர் வேதனை

பீல்டிங் விதிமீறலால் தப்பித்த ரஸ்செல்: கவனக்குறைவால் வெற்றி வாய்ப்பு பறிபோய்விட்டது பஞ்சாப் பயிற்சியாளர் வேதனை
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் கவனக்குறைவாக இருந்ததால் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டதாக பஞ்சாப் பயிற்சியாளர் ஹெஸ்சன் வேதனையுடன் கூறினார்.

கொல்கத்தா, 

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கில் கவனக்குறைவாக இருந்ததால் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டதாக பஞ்சாப் பயிற்சியாளர் ஹெஸ்சன் வேதனையுடன் கூறினார்.

கண்டம் தப்பிய ரஸ்செல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ராபின் உத்தப்பா (67 ரன்) நிதிஷ் ராணா (63 ரன்) அரைசதமும், ஆந்த்ரே ரஸ்செல் 48 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது. மயங்க் அகர்வால் (58 ரன்), டேவிட் மில்லர் (59 ரன்) அரைசதம் அடித்தும் பலன் இல்லை. ஆல்–ரவுண்டராக ஜொலித்த ரஸ்செல் (2 விக்கெட்டும் எடுத்தார்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தங்களது கவனக்குறைவே தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டார். 17–வது ஓவரில் முகமது ‌ஷமி வீசிய யார்க்கரில் ஆந்த்ரே ரஸ்செல் கிளீன் போல்டு ஆனார். அப்போது அவர் 3 ரன் மட்டுமே எடுத்திருந்தார். அந்த சமயத்தில் உள்வட்டத்திற்குள் குறைந்தது 4 பீல்டர்கள் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் 3 பீல்டர் மட்டுமே நின்றதால் விதிமீறலை காரணம் காட்டி அது நோ–பால் என்று நடுவர் அறிவித்தார். இந்த அதிர்ஷ்டத்தால் மீண்டும் பேட் செய்யும் வாய்ப்பை பெற்ற ரஸ்செல் அதன் பிறகு ருத்ரதாண்டவமாடி ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தார்.

ஹெஸ்சன் கருத்து

அதை சுட்டிகாட்டி பேசிய மைக் ஹெஸ்சன், ‘ஆந்த்ரே ரஸ்செலுக்கு பவுலிங் செய்யும் போது, சிறு தவறுக்கு கூட இடம் அளிக்காமல் துல்லியமாக பந்து வீச வேண்டும். ஏனெனில் அவர், ஆட்டத்தின் போக்கை தனிநபராக மாற்றக்கூடிய திறமை சாலி. 17–வது ஓவரில் தான் ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. அவருக்கு நாங்கள் பிரத்யேகமாக திட்டம் வகுத்து, அதை கச்சிதமாக செயல்படுத்தினோம். ஆனால் பீல்டிங்கில் போதிய எச்சரிக்கையுடன் இருக்காமல் போய் விட்டோம். அது தான் ஆட்டத்தை முற்றிலும் மாற்றி விட்டது. இதனால் இறுதி கட்ட ஓவர்களில் 12 அல்லது 14 ரன்கள் வீதம் என்பதற்கு பதிலாக 22 அல்லது 25 ரன்கள் என்று தாறுமாறாக போய்விட்டது.’ என்றார்.

புதுமுக சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே 25 ரன்களை வாரி வழங்கினார். இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘எந்த ஒரு வீரரும் தங்களது முதலாவது ஆட்டத்தில் ஆடும் போது பதற்றமாகத்தான் இருப்பார்கள். அதுவும் இது போன்று ரசிகர்கள் கூட்டத்தின் முன்பு அறிமுக ஆட்டத்தில் அடியெடுத்து வைப்பது மிகவும் கடினமாக இருக்கும். முதல் ஓவரில் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அதில் இருந்து மீண்டு அடுத்த 2 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். அந்த வகையில் எனக்கு திருப்தி தான். அது அவருக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும்.’ என்றும் மைக் ஹெஸ்சன் பதில் அளித்தார்.

ராணா பேட்டி

கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா கூறும் போது, ‘தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளேன். இதே பார்மை தொடரின் கடைசி வரை கொண்டு செல்ல விரும்புகிறேன். இந்த ஆட்டத்தில் 218 ரன்கள் குவித்ததால், ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நோ–பாலின் மூலம் ரஸ்செலுக்கு கிடைத்த மறுவாழ்வால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக வந்தது. ஒரு வேளை 180 அல்லது 200 ரன்கள் எடுத்தாலும் கூட நாங்கள் கடுமையாக போராடி இருப்போம். 2–வது இன்னிங்சில் வேகப்பந்து வீச்சு எடுபடத் தொடங்கியதால் இங்கு சேசிங் செய்வது எளிது அல்ல’ என்றார்.