மலிங்கா வீசிய நோ–பாலை கவனிக்க தவறிய நடுவர் மீது விராட் கோலி சாடல் ‘விழிப்புடன் செயல்பட வேண்டும்’


மலிங்கா வீசிய நோ–பாலை கவனிக்க தவறிய நடுவர் மீது விராட் கோலி சாடல் ‘விழிப்புடன் செயல்பட வேண்டும்’
x
தினத்தந்தி 29 March 2019 10:30 PM GMT (Updated: 29 March 2019 9:04 PM GMT)

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்து நோ–பாலாக வீசப்பட்ட போதிலும் அதை கவனிக்காத நடுவர் மீது பெங்களூரு கேப்டன் கோலி சாடினார். நடுவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

பெங்களூரு, 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்து நோ–பாலாக வீசப்பட்ட போதிலும் அதை கவனிக்காத நடுவர் மீது பெங்களூரு கேப்டன் கோலி சாடினார். நடுவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மும்பை வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19–வது ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. டிவில்லியர்ஸ், ஷிவம் துபே களத்தில் இருந்தனர். இறுதி ஓவரை வீசிய மலிங்கா 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசியும் பலன் இல்லாமல் போனது. 3 விக்கெட் கைப்பற்றிய மும்பை பவுலர் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மலிங்காவின் ‘நோ–பால்’

ஆட்டம் முடிந்து ஒரு சில நிமிடங்களில் மலிங்கா வீசிய கடைசி பந்து டி.வி.யில் ‘ரீப்ளே’ போட்டு பார்க்கப்பட்டது. இதில் மலிங்கா கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ–பாலாக வீசுவது தெளிவாக தெரியவந்தது. இதை நடுவர் கவனிக்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஒருவேளை நடுவர் கவனமுடன் செயல்பட்டு நோ–பால் என்று அறிவித்து இருந்தால், எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் வந்திருக்கும். அத்துடன் கடைசி பந்தில் ஒரு ரன் ஓடி எடுக்க வாய்ப்பு இருந்தது. அதையும் செய்திருப்பார்கள். 5 ரன் தேவை என்ற நிலையில், கடைசி பந்து பிரீஹிட்டாக வீசப்பட்டிருக்கும். அதை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டு ஆட்டத்தின் முடிவை கூட மாற்றி இருப்பார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 2–வது பேட்டிங்கின் போது டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தும் அந்த அணி தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

கோலி அதிருப்தி

நடுவர்கள் மீது கடும் அதிருப்திக்குள்ளான பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ‘நாங்கள் தரம் வாய்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருக்கிறோம். இது கிளப் போட்டி அல்ல. கடைசி பந்தை ‘நோ–பால்’ என்று நடுவர்கள் அறிவிக்காதது அபத்தமானது. மலிங்கா கிரீசுக்கு சில அங்குலம் வெளியே காலை வைத்துள்ளார். நடுவர்கள் தங்களது கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.

அந்த பந்தை நோ–பால் என்று கூறியிருந்தால் கூடுதலாக வீசப்படும் கடைசி பந்தில் எதுவும் நடந்திருக்கலாம். நடுவர்கள் விழிப்போடு கூர்ந்து கவனிக்க வேண்டும்.’ என்றார்.

ரோகித் சர்மா கருத்து

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் மைதானத்தின் எல்லைக்கோட்டை கடந்த பிறகு அது நோ–பால் என்பது எனக்கு தெரிய வந்தது. இது போன்ற தவறுகள் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல. வெற்றி, தோல்வி பெரிய வி‌ஷயம் கிடையாது. ஆனால் இத்தகைய தவறுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்ற முக்கியமான கட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அதாவது அது நோ–பாலாக இருந்தாலும், வைடாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். வருங்காலத்தில் நடுவர்கள் இத்தகைய வி‌ஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். எங்களது பவுலர் பும்ரா முந்தைய ஓவரில் வீசிய ஒரு பந்து வைடாக செல்லவில்லை. ஆனால் நடுவர் வைடு என்று தவறாக அறிவித்தார். அதை அவர்கள் மீண்டும் டி.வி.யில் பார்க்க வேண்டும். நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து வீரர்கள் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற தவறுகளை தடுப்பதற்கு என்ன தீர்வு என்பது தெரியவில்லை.’ என்றார்.

நடுவர்கள் யார்–யார்?

நோ–பாலை கவனிக்காமல் விட்ட நடுவர் சுந்தரம் ரவி, ரோகித் சர்மாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடுவர் சி.நந்தன் இருவரும் இந்தியர்கள் ஆவர். இவர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஐ.பி.எல்.–ல் 56 லீக் ஆட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட 17 நடுவர்களில் (டி.வி. நடுவர் பணியையும் சேர்த்து) 11 பேர் இந்தியர்கள் ஆவர். இந்திய கிரிக்கெட் வாரிய நடுவர்கள் கமிட்டியில் இடம் பிடித்துள்ள பெரும்பாலான நடுவர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடையாது. அதே சமயம் ஐ.சி.சி. எலைட் நடுவர் குழுவில் தற்போது இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் சுந்தரம் ரவி தான். அவரது சர்வதேச அனுபவம் தேவையாக இருப்பதால், ஐ.பி.எல். பணியில் இருந்து அவரை ஒதுக்கி வைக்க முடியாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story