கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் வெற்றி தொடருமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல் + "||" + The teams. In cricket Will Chennai win the victory?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் வெற்றி தொடருமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் வெற்றி தொடருமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை–ராஜஸ்தான் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் 12–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது.

டோனி தலைமையிலான சென்னை அணி தனது முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2–வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும் அடுத்தடுத்து வீழ்த்தியது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் முதலாவது ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடமும், 2–வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது.

சென்னை ஆடுகளம் எப்படி இருக்கும்?

சென்னை அணி தனது 2 ஆட்டங்களிலும் எதிரணியை 150 ரன்களை தாண்டவிடவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி கலக்கி வருகிறார்கள். சென்னையில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 70 ரன்னில் சுருண்டது. 71 ரன் இலக்கை சிரமப்பட்டே சென்னை அணி எட்டிப்பிடித்தது. அந்த அளவுக்கு பிட்ச் மெதுவாக இருந்தது. எனவே உள்ளூரில் நடைபெறும் இந்த 2–வது ஆட்டத்தில் ஆடுகளம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜஸ்தான் அணி 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தாலும், வெற்றி இலக்கை நெருங்கி தான் கோட்டை விட்டது. சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 12 முறையும், ராஜஸ்தான் அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இந்த போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் சுமித், ராகுல் திரிபாதி, கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி.

ஐதராபாத்–பெங்களூரு மோதல்

முன்னதாக ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

முதல் 2 ஆட்டங்களிலும் (சென்னை மற்றும் மும்பைக்கு எதிராக) தோல்வியை தழுவிய பெங்களூரு அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் கோலி, டிவில்லியர்ஸ் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும்.

அதே சமயம் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்ற ஐதராபாத் அணி அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 199 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து பிரமிக்க வைத்தது. 2 ஆட்டங்களிலும் அரைசதம் எடுத்த டேவிட் வார்னர் (85 ரன், 69 ரன்) ஐதராபாத் அணியின் பேட்டிங்குக்கு முதுகெலும்பாக இருக்கிறார். அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6–ல் ஐதராபாத்தும், 5–ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் (டை) முடிந்தது.