ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி 2–வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி 2–வது வெற்றி
x
தினத்தந்தி 30 March 2019 10:30 PM GMT (Updated: 30 March 2019 8:17 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி பஞ்சாப் அணி 2–வது வெற்றியை ப

மொகாலி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி பஞ்சாப் அணி 2–வது வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

12–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 9–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. பஞ்சாப் அணியில் ஒரு மாற்றமாக வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஆர்.அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் தந்தனர். ரோகித் சர்மா 32 ரன்களில் (18 பந்து, 5 பவுண்டரி) வில்ஜோனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (11 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் யுவராஜ்சிங் இறங்கினார். மறுமுனையில் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய குயின்டான் டி காக், அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டினார். ரன்ரேட் 9 ரன்களுக்கு மேலாக சென்றதால் மும்பை அணி 190 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குயின்டான் டி காக் (60 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), யுவராஜ்சிங் (18 ரன், 22 பந்து, 2 பவுண்டரி) வெளியேறியதும் மும்பை அணியின் ரன்வேகம் தளர்ந்தது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் வெகுவாக கட்டுப்படுத்தினார்.

177 ரன்கள் இலக்கு

இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா (31 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) மும்பை அணி சற்று சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. கடைசி 7 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 56 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 177 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் அடியெடுத்து வைத்தனர். மும்பையின் சாதுர்யமான பந்து வீச்சை இருவரும் கணித்து நிதானமாக ஆடினர். மெக்லெனஹானின் ஓவரில் கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். இருப்பினும் ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவர்களில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெய்ல் 40 ரன்களில் (24 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) குருணல் பாண்ட்யாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மயங்க் அகர்வாலும் (43 ரன், 21 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

பஞ்சாப் வெற்றி

இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன், டேவிட் மில்லர் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் 71 ரன்களுடனும் (57 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), டேவிட் மில்லர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

3–வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே ராஜஸ்தானை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 3–வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.

ஸ்கோர் போர்டு

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ (பி) வில்ஜோன் 32

குயின்டான் டி காக் எல்.பி.டபிள்யூ. (பி) ‌ஷமி 60

சூர்யகுமார் யாதவ் எல்.பி.டபிள்யூ. (பி) முருகன் அஸ்வின் 11

யுவராஜ்சிங் (சி) ‌ஷமி (பி) முருகன் அஸ்வின் 18

பொல்லார்ட் (சி) அகர்வால் (பி) ஆண்ட்ரூ டை 7

ஹர்திக் பாண்ட்யா (சி) மன்தீப் சிங் (பி) ‌ஷமி 31

குருணல் பாண்ட்யா (சி) முருகன் அஸ்வின் (பி) வில்ஜோன் 10

மெக்லெனஹான் (நாட்–அவுட்) 0

மார்கண்டே (நாட்–அவுட்) 0

எக்ஸ்டிரா 7

மொத்தம் (20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 176

விக்கெட் வீழ்ச்சி: 1–51, 2–62, 3–120, 4–126, 5–146, 6–162, 7–175

பந்து வீச்சு விவரம்

ஆர்.அஸ்வின் 4–0–26–0

முகமது ‌ஷமி 4–0–42–2

வில்ஜோன் 4–0–40–2

ஆண்ட்ரூ டை 4–0–40–1

முருகன் அஸ்வின் 4–0–25–2

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

லோகேஷ் ராகுல் (நாட்–அவுட்) 71

கிறிஸ் கெய்ல் (சி) ஹர்திக் (பி) குருணல் பாண்ட்யா 40

மயங்க் அகர்வால் (சி) அண்ட் (பி) குருணல் பாண்ட்யா 43

டேவிட் மில்லர் (நாட்–அவுட்) 15

எக்ஸ்டிரா 8

மொத்தம் (18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 177

விக்கெட் வீழ்ச்சி: 1–53, 2–117

பந்து வீச்சு விவரம்

மெக்லெனஹான் 4–0–35–0

மலிங்கா 3–0–24–0

பும்ரா 3.4–0–23–0

ஹர்திக் பாண்ட்யா 3–0–39–0

குருணல் பாண்ட்யா 4–0–43–2

மயங்க் மார்கண்டே 1–0–12–0

--–

ஐ.பி.எல்.–ல் 300 சிக்சர் அடித்தார், கெய்ல்

--–

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், மெக்லெஹானின் பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்த போது, ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் அவரது சிக்சர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை 39 வயதான கெய்ல் படைத்தார். அவர் இதுவரை 115 ஆட்டங்களில் விளையாடி 302 சிக்சர்கள் நொறுக்கி இருக்கிறார். ஐ.பி.எல்.–ல் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் 2–வது இடத்தில் பெங்களூரு வீரர் டிவில்லியர்சும் (193 சிக்சர்), 3–வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனியும் (187 சிக்சர்) உள்ளனர்.


Next Story