சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி: ரபடாவின் யார்க்கர் பந்து வீச்சுக்கு கங்குலி பாராட்டு


சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி: ரபடாவின் யார்க்கர் பந்து வீச்சுக்கு கங்குலி பாராட்டு
x
தினத்தந்தி 31 March 2019 10:00 PM GMT (Updated: 31 March 2019 7:52 PM GMT)

ஐ.பி.எல்.–ல் கொல்கத்தாவுக்கு எதிரான சூப்பர் ஓவரில் அருமையாக யார்க்கர் பந்து வீசி வெற்றியை தேடித்தந்த ரபடாவை டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி பாராட்டினார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல்.–ல் கொல்கத்தாவுக்கு எதிரான சூப்பர் ஓவரில் அருமையாக யார்க்கர் பந்து வீசி வெற்றியை தேடித்தந்த ரபடாவை டெல்லி அணியின் ஆலோசகர் கங்குலி பாராட்டினார்.

சூப்பர் ஓவரில் முடிவு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் இந்த ஓவரில் 5 ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் அந்த அணியின் ஸ்கோரும் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் என்று சமநிலையில் நின்று விட்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 99 ரன்கள் (55 பந்து) எடுத்து கேட்ச் ஆனார்.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஒரு விக்கெட்டுக்கு 10 ரன் எடுத்தது. பின்னர் 11 ரன் இலக்குடன் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் ஆடியது. சூப்பர் ஓவரை டெல்லி வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா வீசினார். அவர், கொல்கத்தாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஆந்த்ரே ரஸ்செல்லை (4 ரன்), மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் யார்க்கராக வீசி மிடில் ஸ்டம்பை தகர்த்தார். ரபடாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு காரணமாக கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் 7 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது.

கங்குலி பேட்டி

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், ‘சூப்பர் ஓவரில் ரபடா, ஆந்த்ரே ரஸ்செல்லுக்கு வீசிய யார்க்கர், அனேகமாக இந்த ஐ.பி.எல்.–ல் வீசப்பட்ட பந்து வீச்சில் சிறந்ததாக இருக்கும். நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்கில் மிரட்டி வரும் ரஸ்செலுக்கு அவர் வீசிய விதம் அற்புதமானது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனெனில் கடந்த சீசனில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. இது இளம் வீரர்களை கொண்ட அணி. இத்தகைய வெற்றிகள் தான் நம்பிக்கையை அளிக்கும்.

துரதிர்ஷ்டவசமாக பிரித்வி ஷா 99 ரன்களில் அவுட் ஆகி விட்டார். இதனால் நான் வருத்தமடைந்தேன். அவர் ஐ.பி.எல். போட்டிகளிலும், மற்ற வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் நிறைய சதங்கள் அடிப்பார்’ என்றார். ‘ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா என்று இந்திய அணிக்காக ஆடும் திறமையான வீரர்கள் எங்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த முறை ஐ.பி.எல்.–ல் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்றும் கங்குலி குறிப்பிட்டார்.


Next Story