கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை ஊதித்தள்ளியது ஐதராபாத் பேர்ஸ்டோ, வார்னர் சதம் அடித்து அசத்தல் + "||" + The IPL Cricket: Hyderabad blowing Bangalore

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை ஊதித்தள்ளியது ஐதராபாத் பேர்ஸ்டோ, வார்னர் சதம் அடித்து அசத்தல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை ஊதித்தள்ளியது ஐதராபாத் பேர்ஸ்டோ, வார்னர் சதம் அடித்து அசத்தல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை ஊதித்தள்ளிய ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை ஊதித்தள்ளிய ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ, வார்னர் சதம் அடித்து அசத்தினர்.

கேப்டனுக்கு ஓய்வு

8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 11–வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதியது. ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் லேசான காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அணியை வழிநடத்தும் பொறுப்பை புவனேஷ்வர்குமார் ஏற்றார். வில்லியம்சன் இடத்திற்கு முகமது நபி அழைக்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய கேட்டுக் கொண்டார். தனது கணிப்பு தவறு என்பதை அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் உணர்ந்து இருப்பார்.

முதல் விக்கெட்டுக்கு சாதனை

ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் வார்னரும் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியை ஓடவிட்டு அட்டகாசப்படுத்தினர். தொடர்ந்து எதிரணியின் பந்து வீச்சை தெறிக்கவிட்டு ஸ்கோரை எகிற வைத்தனர். புதுமுக வீரர் ராய் பர்மான், கிரான்ட்ஹோம் ஓவர்களில் பேர்ஸ்டோ அனாயசமாக சிக்சர்களை பறக்க விட்டு மிரள வைத்தார். வார்னரும் ஏதுவான பந்துகளை விரட்டியடிக்க தவறவில்லை. இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் பெங்களூரு கேப்டன் விராட் கோலி விழிபிதுங்கிப் போனார். அபாரமாக ஆடிய பேர்ஸ்டோ 52 பந்துகளில் தனது ஐ.பி.எல். கன்னி சதத்தை எட்டினார்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் திரட்டிய போது பிரிந்தனர். பேர்ஸ்டோ 114 ரன்களில் (56 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.–ல் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றனர். இதற்கு முன்பு கொல்கத்தாவின் கிறிஸ் லின்–கவுதம் கம்பீர் இணை 2017–ம் ஆண்டு குஜராத் லயன்சுக்கு எதிராக 184 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை வார்னர்–பேர்ஸ்டோ முறியடித்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் 9 ரன்னில் ரன்–அவுட் ஆனார்.

வார்னர் சதம்

மறுமுனையில் சதத்தை நெருங்கிய டேவிட் வார்னருக்கு மூன்று இலக்கத்தை தொடுவதற்கு கடைசி ஓவரில் 7 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரின் 4–வது பந்தில் பவுண்டரி அடித்து வார்னர் தனது 4–வது சதத்தை நிறைவு செய்தார். ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் அவர் அரைசதம் அடித்தது நினைவிருக்கலாம்.

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஐ.பி.எல்.–ல் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். வார்னர் 100 ரன்களுடனும் (55 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) யூசுப் பதான் 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பெங்களூரு தோல்வி

பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி (ஆப்கானிஸ்தான் நாட்டவர்) அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி (3 ரன்), டிவில்லியர்ஸ் (1 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினர். அத்துடன் அவர்களின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. அதன் பிறகு ஏதோ கடமைக்கு பேட்டிங் செய்தனர். ஒரு கட்டத்தில் 35 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபத்திற்கு உள்ளான பெங்களூரு அணியை காலின் கிரான்ட்ஹோம் (37 ரன்) கவுரவ நிலையாக 100 ரன்களை கடக்க உதவினார். அந்த அணி 19.5 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. 3–வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணிக்கு இது 2–வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத பெங்களூரு அணிக்கு இது 3–வது தோல்வியாகும். பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

கோலி கருத்து

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களது மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று. தரமான அணியின் மூலம் மூன்று துறைகளிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டோம். முதல் பந்தில் இருந்து கடைசி விக்கெட் வரை எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. நாங்கள் ஒரு சாம்பியன் அணி என்பதை அவர்கள் நிரூபித்து விட்டனர். இன்னும் எங்களுக்கு 11 லீக் ஆட்டங்கள் உள்ளன. விரைவில் நிலைமையை மாற்ற வேண்டியது முக்கியம்’ என்றார்.

சாதனை துளிகள்

*பெங்களூரு அணியில் ரூ.1½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் பிரயாஸ் ராய் பர்மான் இந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்தார். இவரது வயது 16 ஆண்டு 157 நாட்கள். இதன் மூலம் ஐ.பி.எல்.–ல் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சிறப்பை பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஆவார்.

*கெவின் பீட்டர்சன் (டெல்லி அணி), பென் ஸ்டோக்ஸ் (முந்தைய புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக) ஆகியோருக்கு பிறகு ஐ.பி.எல்.–ல் சதம் அடித்த இங்கிலாந்து நாட்டவர் பேர்ஸ்டோ தான்.

*ஐ.பி.எல்.–ல் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் (6 சதம்) முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தை பெங்களூரு கேப்டன் விராட் கோலி, சென்னை வீரர் ஷேன் வாட்சன் ஆகியோருடன் டேவிட் வார்னர் (3 பேரும் தலா 4 சதம்) பகிர்ந்து கொண்டுள்ளார்.

*ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், பேர்ஸ்டோவும் இணைந்து கொல்கத்தாவுக்கு எதிராக 118 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக 110 ரன்களும், இப்போது பெங்களூருவுக்கு எதிராக 185 ரன்களும் கூட்டாக எடுத்துள்ளனர். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக 3 செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் ஜோடி என்ற மகத்தான சாதனையை படைத்தனர்.

ஒரே இன்னிங்சில் இருவர் சதம் அடித்த 2–வது நிகழ்வு

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், பேர்ஸ்டோ இருவரும் சதம் விளாசினர். ஐ.பி.எல்.–ல் ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் சதம் எடுப்பது இது 2–வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2016–ம் ஆண்டு குஜராத் லயன்சுக்கு எதிராக பெங்களூரு அணியின் விராட் கோலி (109 ரன்), டிவில்லியர்ஸ் (129 ரன்) சதம் கண்டிருந்தனர். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஒரே இன்னிங்சில் 2 பேர் செஞ்சுரி போடுவது இது 4–வது முறையாகும்.