பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி
x

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

துபாய்,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 98 ரன்னும், மேக்ஸ்வெல் 70 ரன்னும் (33 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஷான் மார்ஷ் 61 ரன்னும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 53 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 4 விக்கெட்டும், ஜூனைத்கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது சதம் அடித்த ஹாரிஸ் சோகைல் 130 ரன்னும், ஷான் மசூத் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹாரிஸ் சோகைல் சதம் பலன் அளிக்காமல் வீணானது. பொறுப்பு கேப்டன் இமாத் வாசிம் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெரென்டோர்ப் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும் ஏற்கனவே தனதாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story