12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்


12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்
x
தினத்தந்தி 4 April 2019 10:02 PM GMT (Updated: 4 April 2019 10:02 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.

கொழும்பு,

இந்த ஆட்டம் முடிந்ததும் உடனடியாக தனது தாயகமான இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பினார். அங்கு சென்றதும் சூட்டோடு சூட்டாக நேற்று காலை பல்லகெலேவில் நடந்த உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்றார். காலே-கண்டி அணிகள் இடையிலான இந்த ஆட்டத்தில் காலே அணிக்கு மலிங்கா கேப்டனாக பணியாற்றினார். இதில் முதலில் பேட்டிங் செய்து காலே அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கண்டி அணி 18.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. காலே கேப்டன் மலிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். 12 மணி நேர இடைவெளியில் இரண்டு நாட்டில் நடந்த போட்டியில் களம் கண்ட மலிங்கா மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்து வியக்க வைத்துள்ளார்.

இலங்கை உள்நாட்டு கிரிக்கெட் தொடர் வருகிற 11-ந்தேதி முடிவடைகிறது. அதன் பிறகு மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவார் என்று தெரிகிறது.

Next Story