கிரிக்கெட்

‘மன்கட்’ முறையில் எனக்கு அளிக்கப்பட்ட ரன்-அவுட் தவறானது ஜோஸ் பட்லர் கருத்து + "||" + My run-out is wrong Josh Butler commented

‘மன்கட்’ முறையில் எனக்கு அளிக்கப்பட்ட ரன்-அவுட் தவறானது ஜோஸ் பட்லர் கருத்து

‘மன்கட்’ முறையில் எனக்கு அளிக்கப்பட்ட ரன்-அவுட் தவறானது ஜோஸ் பட்லர் கருத்து
‘மன்கட்’ முறையில் தனக்கு அளிக்கப்பட்ட ‘ரன்-அவுட்’ தவறான முடிவாகும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.


இந்த போட்டியில் 13-வது ஓவரில் ஆர்.அஸ்வின் பந்து வீச முயற்சிக்கையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (69 ரன்) கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். இதனை கவனித்த அஸ்வின் பந்து வீசாமல் திடீரென நின்றதுடன் பந்தால் ‘ஸ்டம்பை’அடித்து ‘ரன்-அவுட்’ கேட்டு அப்பீல் செய்தார். இந்த சர்ச்சைக்குரிய அவுட் விவகாரம் 3-வது நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஜோஸ் பட்லர் ‘ரன்-அவுட்’ என்று அறிவிக்கப்பட்டது.

‘மன்கட்’ முறையில் ஜோஸ் பட்லர் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்ட விதம் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த விஷயத்தில் அஸ்வின் செய்தது சரி தான் என்றும், அஸ்வினின் செயல்பாடு விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்றும் இரண்டு விதமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அஸ்வின் ‘ரன்-அவுட்’ செய்தது சரியானதே என்று முதலில் கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் முக்கிய பங்கும் வகிக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.), அடுத்த நாளில் அஸ்வினின் செயல் விளையாட்டு உத்வேகத்துக்கு உகந்ததாக இல்லை என்று பல்டி அடித்தது.

இந்த நிலையில் தனது ‘ரன்-அவுட்’ குறித்து ஜோஸ் பட்லர் முதல்முறையாக மவுனத்தை கலைத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

மன்கட் ‘ரன்-அவுட்’ முறை கிரிக்கெட் விதிகளில் இருக்க வேண்டியது அவசியம் தான். ஏனெனில் பவுலர் பந்து வீசுவதற்கு முன்னதாக பேட்ஸ்மேன் ஆடுகளத்தில் பாதி தூரம் ஓடிவிடாமல் இருக்க இது தேவையானதாகும். ஆனால் இந்த விதிமுறையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதாவது பந்து வீச்சாளர் பந்தை கைகளில் இருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் போது பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால் அவுட் செய்யலாம் என்று கூறப்பட்டு இருப்பதில் தெளிவான வரைமுறை இல்லை. எனவே இந்த விதிமுறையில் உள்ள குழப்பத்துக்கு தீர்வு காண வேண்டியது அவசியமானதாகும்.

எனக்கு ரன்-அவுட் அளிக்கப்பட்ட வீடியோ காட்சியை பார்த்தால் தவறான முடிவு அளிக்கப்பட்டது என்பது தெரியும். பவுலர் பந்தை கையை விட்டு விடுவிப்பார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் நான் கிரீசிற்குள் தான் இருந்தேன். அப்படி இருக்கையில் எனக்கு ‘ரன்-அவுட்’ வழங்கப்பட்டது உண்மையிலேயே மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அந்த நேரத்தில் அஸ்வின் நடந்து கொண்ட பாணியை நான் விரும்பவில்லை. இந்த போட்டி தொடரின் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவத்தை நான் ஒரு தவறான முன்னுதாரணமாக கருதுகிறேன். விரும்பத்தகாத இந்த சம்பவத்தால் சில நாட்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக இருந்தது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் எனக்கு நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.