வெற்றியின் சிகரமாக விளங்கும் விராட் கோலி


வெற்றியின் சிகரமாக விளங்கும் விராட் கோலி
x
தினத்தந்தி 5 April 2019 10:02 AM GMT (Updated: 5 April 2019 10:02 AM GMT)

கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக பேசப்படுபவர் விராட் கோலி.

சிறந்த பேட்ஸ்மேனாக பேசப்படுபவர் விராட் கோலி விளையாட்டுத் திறனுக்காக இந்தியாவின் உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை 2018-ம் ஆண்டு பெற்றார்.

கோலி, டெல்லியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் 1988-ம் ஆண்டு, நவம்பர் 5-ம் நாளாகும். கோலியின் தந்தை குற்றவியல் வக்கீல் ஆவார். அவரது தாய் இல்லத்தரசி. 3 வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டார் கோலி. அவரது தந்தை கோலிக்கு டென்னிஸ் பந்து கொண்டு பந்து வீசுவார்.

9 வயதான போது கோலி, ராஜ்குமார் சர்மா நடத்திய கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துவிடப் பட்டார். கோலியின் தந்தை அவரை தினமும் தனது ஸ்கூட்டரில் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். கோலி 2002-ம் ஆண்டு டெல்லி 15 வயதுக்குட்பட்டோர் அணியில் ஆடினார். அதில் சிறப்பாக விளையாடிய அவர், 4 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் டெல்லி ரஞ்சி டிரோபி அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

2008-ம் ஆண்டு இளையோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அவர் கோப்பையை வென்று உலகின் கவனத்தை ஈர்த்தார். அதே நேரத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஐ.பி.எல். அணியிலும் விளையாடினார். அங்கிருந்து இந்திய மூத்தோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கெடுத்தார். 2011-ம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறார் . டெஸ்ட் போட்டிகளில் கோலி 6 ஆயிரத்து 613 ரன்களுடன், 53.76 சராசரி பெற்றார். இதில் 25 சதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 41 சதங்களுடன் 10 ஆயிரத்து 823 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 59.79 ஆகும்.

17 வயதுக்கு உட்பட்டோர் அணியில் விளையாடியபோது அவர் ‘சிக்கு’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார். 2006-ல் ரஞ்சி டிரோபியில் கர்நாடக அணிக்கு எதிராக விளையாடியபோது அவரது தந்தை காலமானார். அவர் களத்தில் 90 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தபோது தந்தை இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், போட்டியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 18 வயதே ஆகியிருந்தது.

தந்தையின் இறப்பு கோலிக்கு வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக அவரது தாயார் கூறுகிறார். “அன்று இரவே அவன் மனதில் நம்பிக்கை வளர்த்துக் கொண்டு வயது முதிர்ச்சி அடைந்தவனாக செயல்பட தொடங்கினான். தன் வாழ்க்கை கிரிக்கெட் சார்ந்தது என்றும், தந்தையின் கனவும் அதில் சாதிப்பதுதான் என்றும் உணர்ந்து செயல்பட தொடங்கினான். இப்போது அவனது தந்தையின் கனவையும் விஞ்சி வெற்றிகளை குவித்துவிட்டான். அது அவனது கனவும்கூட...” என்கிறார் அவனது தாய்.

இவரது இரண்டாவது திருப்பு முனையாக அமைந்தது உணவுக் கட்டுப்பாடு பழக்க வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தீவிர உணவுக் கட்டுப்பாடு பழக்கவழக்கத்தை உறுதியாக பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் கோலி. டீன் ஏஜ் வயதில் தசைப்பிடிப்பான கன்னத்துடன் காணப்பட்ட அவர், இப்போது உறுதியான உடல் அமைப்புக்கு மாறிவிட்டாார். மெலிந்த மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு விளையாட்டில் நீண்ட நேரம் களைப்பின்றி ஆட துணை செய்யும் என்பதே அவரது இந்த உணவுக் கட்டுப்பாட்டிற்கு காரணமாகும். இந்த கட்டுப்பாடு அவரது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவரது விளையாட்டுத்திறனை உச்சபட்சமாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது என்பதை அவரது சாதனைகளைக் கொண்டு அறியலாம்.

இப்போது முதன்மை வீரராக ஜொலித்துக் கொண்டிருக்கும் அவர், தனது ஓய்வை அறிவிக்கும்போது, கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த 3 வீரர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பார் என்று நம்பலாம்.


Next Story