உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிப்பு


உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2019 7:12 AM GMT (Updated: 8 April 2019 7:51 PM GMT)

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்.15-ல் அறிவிக்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் வருகிற 15-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 9 அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். அந்த கெடுவுக்கு 8 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 15-ந் தேதி இந்திய அணியை அறிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் மும்பையில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் தேர்வாளர்கள் ஆலோசித்து இந்திய அணியை அறிவிக்கின்றனர்.

மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்த பிப்ரவரி மாதத்திலே ஏறக்குறைய அடையாளம் காணப்பட்டு விட்டது என்றும் கடைசி நேரத்தில் ஒரிரு இடத்துக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் தெரிவித்து இருந்தார். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் வீரர்கள் காட்டும் திறமை உலக கோப்பைக்கான அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படாது என்றும் அவர் கூறியிருந்தார். இதே கருத்தை தான் இந்திய அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மாவும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

எனவே விராட்கோலி தலைமையிலான இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இடம் பெற்று வரும் பெரும்பாலான வீரர்கள் மாற்றமின்றி இடம் பெறுவார்கள் எனலாம். 4-வது வீரருக்கான வரிசையில் இடம் பிடிப்பது யார்? என்பதில் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அச்சமின்றி அடித்து ஆடும் குணம் கொண்ட இளம் வீரர் ரிஷாப் பான்டுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யாவுடன், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. மாற்று தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Next Story