சென்னை ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி ‘இது போன்ற பிட்ச்சில் ஆட விரும்பவில்லை’


சென்னை ஆடுகளம் குறித்து டோனி மீண்டும் அதிருப்தி ‘இது போன்ற பிட்ச்சில் ஆட விரும்பவில்லை’
x
தினத்தந்தி 10 April 2019 10:00 PM GMT (Updated: 10 April 2019 8:30 PM GMT)

சென்னை ஆடுகளம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 108 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. பாப் டு பிளிஸ்சிஸ் 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வெற்றிக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி, ஆடுகளம் (பிட்ச்) குறித்து தனது அதிருப்தியை மறுபடியும் வெளிப்படுத்தினார். இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை மைதானத்தில் தான் ரன்வேகம் மந்தமாக உள்ளது. இங்கு இதுவரை நடந்துள்ள போட்டிகளின் சராசரி ரன்ரேட் 6.57. வேறு எந்த மைதானத்திலும் ரன்ரேட் 7-க்கு கீழாக இல்லை.

டோனி அதிருப்தி

பிட்ச் குறித்து டோனி கூறுகையில், ‘மீண்டும் முதல் போட்டி போலவே (பெங்களூரு அணி 70 ரன்னில் சுருண்டது) அமைந்து விட்டது. ஆடுகளம் குறித்து புகார் கூறிக்கொண்டே வெற்றியும் பெற்று விடுகிறோம். இது போன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. ஏனெனில் இங்கு மிகவும் குறைந்த ஸ்கோரே எடுக்க முடிகிறது. எங்களது பேட்ஸ்மேன்களுக்கும் இந்த ஆடுகளத்தில் ரன்கள் எடுப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. அதுவும் முதலில் பேட் செய்தால் சிரமம் அதிகம். பனிப்பொழிவினால் பிற்பகுதியில் ஓரளவு பேட்டிங்குக்கு எளிதாக இருக்கிறது’ என்றார்.

மேலும் டோனி கூறியதாவது:-

எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங்குக்கும், இம்ரான் தாஹிருக்கும் வயதாகி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பழைய ஒயின் மாதிரி. நாள்பட்ட ஒயின் சுவை அதிகரிக்கும். அதே போல் அனுபவசாலிகளான இருவரும் நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் ஆட்டங்களில் ஹர்பஜன்சிங் அபாரமாக பந்து வீசுகிறார். அணிக்கு எப்போது எல்லாம் எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதோ அந்த சமயம் இம்ரான் தாஹிரை அழைத்தால், அந்த பணியை கச்சிதமாக செய்து கொடுப்பார். நம்பிக்கை அளிக்கும் வகையில் தாஹிரின் பந்து வீச்சு இருக்கும். ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவர் இல்லாததால் சரியான கலவையில் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது கடினமாக இருக்கிறது. காயத்தில் இருந்து குணமடைந்து விரைவில் அவர் அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.

ரசிகர்களால் நெகிழ்ச்சி

சென்னை மைதானத்தில் நான் நீண்ட காலம் விளையாடி வருகிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் உள்பட மறக்க முடியாத நினைவுகள் எனக்கு இங்கு நிறைய உண்டு. ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்சை கொண்டாடுகிறார்கள்.

இந்த அணி உதயமானதில் இருந்து நானும் அதில் அங்கம் வகிக்கிறேன். எனக்கும், சென்னை ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு சிறப்பு வாய்ந்தது. அவர்கள் உண்மையிலேயே என்னை உள்ளூர் வீரராக ஏற்றுக் கொண்டு விட்டனர்.

இவ்வாறு டோனி கூறினார்.

சாஹர் கருத்து

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘நிச்சயம் இது போதுமான ஸ்கோர் அல்ல. ஆடுகளத்தன்மை மற்றும் பனிப்பொழிவை வைத்து இங்கு எந்த ஸ்கோர் சவாலாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. ஆனால் ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ‘பவர்-பிளே’வுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. ரஸ்செல் சூழ்நிலையை உணர்ந்து பக்குவமுடன் ஆடியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை பவுலர் தீபக் சாஹர் கூறுகையில், ‘எனது செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதைவிட சிறந்த ஆடுகளத்தை எதிர்பார்க்கிறோம். இந்த ஆடுகளத்தில், மண்ணில் இருந்து வெளியேறும் வெப்பம், ஆட்டத்துக்கு உதவிகரமாக இல்லை. இதனால் இத்தகைய ஆடுகளத்தை யாரும் விரும்பமாட்டார்கள். இந்த ஆண்டு சென்னையில் நிறைய ஆட்டங்களில் ஆடப்போகிறோம் என்பது தெரியும். எனவே மெதுவாகவும், யார்க்கராவும் வீசுவதற்கு பயிற்சி மேற்கொள்கிறேன். ஓய்வறையில் டோனியிடம் எனது பந்து வீச்சு குறித்து பேசுவேன். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பிராவோ இல்லாததால் இறுதிகட்டத்தில் பந்து வீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.’ என்றார்.

Next Story