உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு பாண்டிங் விரும்பும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்


உலக கோப்பை ஆஸ்திரேலிய அணிக்கு பாண்டிங் விரும்பும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள்
x
தினத்தந்தி 11 April 2019 10:19 PM GMT (Updated: 11 April 2019 10:19 PM GMT)

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.

மெல்போர்ன்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருகிற 15-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. உலக கோப்பை போட்டி முடிந்ததும், அடுத்த 2 வாரத்தில் ஆஸ்திரேலிய அணி முக்கியமான இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கும், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் கட்டாயம் வேண்டும். இவர்களை தவற விடாமல் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் களம் இறக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் ஐ.பி.எல். போட்டியில் ஆடாததால் புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைக்க முடியும். காயமின்றி போதுமான உடல்தகுதியுடன் அவர்கள் இருந்தால் ஆஸ்திரேலிய அணியால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றும் பாண்டிங் குறிப்பிட்டார். உலக கோப்பை போட்டியின் போது பாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக இணைய இருக்கிறார்.

உள்ளூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பிறகு மிட்செல் ஸ்டார்க்கும், இலங்கைக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஹேசில்வுட்டும் எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. அவர்கள் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்கள். கம்மின்ஸ் மட்டும் தொடர்ச்சியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story