ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் டெல்லிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் டெல்லிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?
x
தினத்தந்தி 11 April 2019 11:34 PM GMT (Updated: 11 April 2019 11:34 PM GMT)

இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சந்தித்த ஆட்டம் சமன் (டை) ஆனது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– டெல்லி கேப்பிட்டல்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

தினேஷ் கார்த்திக் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

கிறிஸ் லின், ரஸ்செல், சுனில் நரின், உத்தப்பா, குல்தீப் யாதவ்

ஷிகர் தவான், ரபடா, ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல்

இதுவரை நேருக்கு நேர் 22 (டை1)

13 வெற்றி, 8 வெற்றி

இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் சந்தித்த ஆட்டம் சமன் (டை) ஆனது. இதில் இரு அணிகளும் தலா 185 ரன்கள் எடுக்க, அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு அதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் கொல்கத்தா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தா அணிக்கு சாதகமான அம்சமாகும். சுழற்பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கொல்கத்தா அணி வலுவாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆந்த்ரே ரஸ்செலின் ‘கதகளி’யைத்தான் தான் இப்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். இதுவரை களம் இறங்கிய ஆட்டங்களில் முறையே 49, 48, 62, 48, 50 ரன்கள் வீதம் எடுத்துள்ள ரஸ்செல் நடப்பு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த (25 சிக்சர்) வீரராக வலம் வருகிறார்.

கிறிஸ் லின், சுனில் நரின், கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள கொல்கத்தா அணி, முந்தைய ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக வெறும் 108 ரன்னில் முடங்கிப்போனது. அந்த தோல்வியை மறந்து விட்டு உள்ளூரில் கோலோச்சுவதற்குரிய வியூகங்களை அந்த அணி வகுத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று இதுவரை 6 புள்ளி பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூரு சேலஞ்சர்சை சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ன்ஸ் அணி 4 நாள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் காண காத்திருக்கிறது. பந்து வீச்சில் துல்லியமாக யார்க்கர் வீசி மிரட்டும் காஜிசோ ரபடாவும் (11 விக்கெட்), பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் உள்ளிட்டோரும் நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானின் பார்ம் தான் கவலை அளிக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய தவான், அடுத்த 4 ஆட்டங்களில் சொதப்பினார். உலக கோப்பை அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட நிலையில் தவான் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். மொத்தத்தில் கொல்கத்தாவின் அதிரடிக்கு இணையாக டெல்லி அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

கொல்கத்தா ஈடன்கார்டன், இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சொந்த ஊர் மைதானமாகும். ஆனால் இந்த முறை அவர் டெல்லி அணியின் ஆலோசகராக செயல்படுவதால், கொல்கத்தா ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும், கரகோ‌ஷமும் எந்த மாதிரி இருக்கும் என்பதும் ஆவலை தூண்டியுள்ளது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story