ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 14 April 2019 1:05 AM GMT (Updated: 14 April 2019 1:05 AM GMT)

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–சென்னை சூப்பர் கிங்ஸ்

இடம்: கொல்கத்தா

நேரம்: மாலை 4 மணி

தினேஷ் கார்த்திக்/டோனி

ரஸ்செல், சுனில் நரின், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், சுப்மான் கில்/ஷேன் வாட்சன், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர்.

7 வெற்றி இதுவரை நேருக்கு நேர்: 19 12 வெற்றி

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சென்னை அணி

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 108 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி சென்னை அணி கடிவாளம் போட்டது. மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்ட சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றியை தனதாக்கியது. அந்த வெற்றி பயணத்தை தொடர சென்னை அணி முழு வேகத்துடன் செயல்படும். சென்னை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் கடைசி பந்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் நோ–பால் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை அணி கேப்டன் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், விமர்சனத்துக்கும் ஆளானார். அந்த சர்ச்சையை புறம் தள்ளி டோனி தனது கேப்டன்ஷிப் வெற்றியை அதிகரிக்க முனைப்பு காட்டுவார்.

கொல்கத்தா அணி 7 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி நெருக்கடியில் உள்ளது. அந்த அணி அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்செல்லையே அதிகம் நம்பி இருக்கிறது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் 40 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் ரஸ்செல் இதுவரை 29 சிக்சர்கள் அடித்து பிரமிக்க வைத்துள்ளார். மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி வரும் ரஸ்செல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ஆடாமல் போனால் அது கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவாகும். போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். எனவே இந்த ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்–டெல்லி கேப்பிட்டல்ஸ்

இடம்: ஐதராபாத்

நேரம்: இரவு 8 மணி

கேன் வில்லியம்சன்/ஸ்ரேயாஸ் அய்யர்

டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, ரஷித் கான், யூசுப் பதான், விஜய் சங்கர்/ஷிகர் தவான், ரபடா, ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல்.

9 வெற்றி இதுவரை நேருக்கு நேர்: 13 4 வெற்றி

ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக இந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே களம் இறங்கிய கேன் வில்லியம்சன் உடல் தகுதியை எட்டி இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் களம் காண்பார் என்று தெரிகிறது. கடந்த 2 லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணி அடுத்தடுத்து தோல்வி கண்டது. இதனால் வெற்றிப்பாதைக்கு திரும்ப அந்த அணி ஆர்வம் காட்டும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து சாய்த்தது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story