ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தது: பந்து வீச்சாளர்களுக்கு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு


ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தது: பந்து வீச்சாளர்களுக்கு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
x
தினத்தந்தி 15 April 2019 10:49 PM GMT (Updated: 15 April 2019 10:49 PM GMT)

ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்த பந்து வீச்சாளர்களுக்கு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. டெல்லி அணி நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி ஒரு கட்டத்தில் 101 ரன்னுக்கு 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல் சரிந்தன. ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்னில் சுருண்டு தோல்வி கண்டது.

அந்த அணி கடைசி 15 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 51 ரன்னும், பேர்ஸ்டோ 41 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 17 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டம் இழந்ததால் நான் அல்லது ரிஷாப் பான்ட் தாக்குப்பிடித்து ஆட வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த விதம் சரியானது அல்ல. கடைசி கட்டத்தில் அக்‌ஷர் பட்டேல், கீமோ பால் ஆகியோர் ஸ்கோர் உயர உதவினார்கள். வெளியூரில் கிடைத்த இந்த வெற்றி நல்ல நம்பிக்கை அளிக்கிறது. எங்கள் அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘முதல் பாதியில் எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்தது. பேட்டிங்கில் முயற்சித்தும் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமையவில்லை. இதுபோன்ற போட்டிகளில் ஒருபோதும் மெத்தனம் கூடாது. எந்தவொரு அணியும், எந்த அணியையும் வீழ்த்த முடியும். டெல்லி அணியினர் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்’ என்றார்.


Next Story