உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்


உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 15 April 2019 11:13 PM GMT (Updated: 15 April 2019 11:13 PM GMT)

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்தனர்.

மும்பை,

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.

தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் 2-வது விக்கெட் கீப்பர் யார்? என்பதில் 33 வயதான தமிழகத்தை தினேஷ் கார்த்திக், 21 வயதான ரிஷாப் பான்ட் இடையே போட்டி நிலவியது. இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் 2-வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

பேட்டிங்கில் 4-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவர் என்று விராட்கோலியால் குறிப்பிடப்பட்ட அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரியாக ஆடாததால் வாய்ப்பை இழந்துள்ளார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறையிலும் சிறப்பாக செயல்படும் தமிழக வீரர் விஜய் சங்கர் அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடக்கூடிய லோகேஷ் ராகுல் எதிர்பார்த்தபடி தேர்வாகி இருக்கிறார். ‘ஆல்-ரவுண்ட்’ திறமையின் அடிப்படையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.

எல்லோரும் எதிர்பார்த்தப்படி இந்திய அணியில் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 5 சிறப்பு பேட்ஸ்மேன், 2 விக்கெட் கீப்பர், 3 வேகப்பந்து வீச்சாளர், 3 ஆல்-ரவுண்டர், 2 சிறப்பு சுழற்பந்து வீச்சாளர் ஆகியோர் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா (துணைகேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா.

12 ஆண்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த அவர் 2011, 2015-ம் ஆண்டு போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. டோனி 4-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலி 3-வது முறையாக உலக கோப்பையில் போட்டியில் விளையாட தேர்வாகி இருக்கிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த (2015) உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்து இருந்தனர்.

இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோனிக்கு காயம் அடைந்து விளையாட முடியாமல் போனால் தான் 2-வது விக்கெட் கீப்பருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட முக்கியமான சூழ்நிலையில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடிய வீரர் யார்? என்று பார்த்ததில் தினேஷ் கார்த்திக் சரியானவர் என்று நினைத்து அவரை தேர்வு செய்தோம். ரிஷாப் பான்ட் திறமையான விக்கெட் கீப்பர் தான். அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அவர் அணியில் இடம் பெறாமல் போனது எதிர்பாராததாகும்.

2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு 4-வது வீரர் வரிசைக்கு நாங்கள் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பார்த்தோம். அதில் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம். 4-வது வீரர் வரிசையில் ஆட கேதர் ஜாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் யார்? ஆடும் லெவனுக்கு தேவை என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும்.

கடந்த 1½ ஆண்டுகளாக மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அணியில் கூடுதல் ஆல்-ரவுண்டர் தேவைப்பட்டால் ரவீந்திர ஜடேஜாவை பயன்படுத்த முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டி தொடரின் 2-வது கட்டத்தில் ஆடுகளம் அதிகம் உலர்ந்து இருக்கும். அந்த மாதிரியான தன்மையில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் இந்திய அணியினருடன் இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். முக்கிய 3 வேகப்பந்து வீச்சாளர்களில் யாராவது ஒருவர் காயம் அடைய நேர்ந்தால் இந்த இருவரில் இருந்து ஒருவர் பயன்படுத்தப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (ஜூன் 5-ந் தேதி) சந்திக்கிறது.

கனவு நனவாகி இருக்கிறது - விஜய் சங்கர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உலக கோப்பை அணியில் இடம் கிடைத்து இருப்பது குறித்து விஜய் சங்கர் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை அணியில் இடம் பிடித்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. கனவு நனவானது போல் உணருகிறேன். உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள ஐதராபாத் வீரர் புவனேஷ்வர்குமாரிடம் இருந்து பெரிய போட்டியில் நெருக்கடியை கையாள்வது எப்படி? என்பது குறித்து நிறைய கற்று வருகிறேன்’ என்றார்.


Next Story