‘ஹர்திக் பாண்ட்யா ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ பெங்களூரு கேப்டன் விராட்கோலி கருத்து


‘ஹர்திக் பாண்ட்யா ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ பெங்களூரு கேப்டன் விராட்கோலி கருத்து
x
தினத்தந்தி 16 April 2019 10:00 PM GMT (Updated: 16 April 2019 8:12 PM GMT)

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை நாங்கள் கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரி

மும்பை, 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை நாங்கள் கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது’ என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

பெங்களூரு அணி 7–வது தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 31–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை மீண்டும் வீழ்த்தி 5–வது வெற்றியை ருசித்தது.

பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டாக் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் நல்ல ஆரம்பம் (7.1 ஓவர்களில் 70 ரன்) அமைத்து கொடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா (37 ரன்கள், 16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) தங்கள் அணி வெற்றியை எட்ட வழிவகுத்தார். முன்னதாக ஹர்திக் பாண்ட்யா 6 ரன்னில் இருக்கையில் நவ்தீப் சைனி பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மாற்று ஆட்டக்காரர் டிம் சவுதி நழுவ விட்டது பெங்களூரு அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. மும்பை அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. 4 விக்கெட் வீழ்த்திய மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார். ஒட்டுமொத்தத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி பெற்ற 16–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றி கண்ட அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. 8–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7–வது தோல்வியை சந்தித்ததன் மூலம் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே–ஆப்) வாய்ப்பு சிக்கலானது.

பவுலர்களுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘ஹர்திக் பாண்ட்யாவின் வேறுவிதமான அதிரடி ஆட்டம் அணிக்கு மட்டுமின்றி அவருக்கும் நன்மை அளித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு அதிக ஆட்டங்களில் விளையாடாத அவர் இந்த சீசனில் தனது ஆட்டத்தை நிரூபிக்க பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பங்களிக்க விரும்புகிறார். அவரது அபாரமான ஆட்டம் முக்கியமான போட்டிகளில் எங்களது வெற்றிக்கு உதவுகிறது. மலிங்கா நெருக்கடியான சூழ்நிலையிலும் நன்றாக பந்து வீசி அணியின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். வான்கடே மைதானத்தில் கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீசுவது என்பது எளிதான காரியம் அல்ல. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு அணியினரை 171 ரன்களுக்குள் எங்கள் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தியது சிறப்பானதாகும். ஆடுகளத்தின் தன்மையின் போக்கை முன்பே அறிந்து இருந்தால் நான் ‘சேசிங்’ செய்வதை விரும்பி இருக்க மாட்டேன். இந்த சீசனில் வான்கடே ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாகவே இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் நல்ல தொடக்கம் கண்டோம். பின்னர் வந்த வீரர்கள் அந்த அடித்தளத்தை சரியாக பயன்படுத்தினார்கள். இல்லையெனில் சேசிங் செய்வது எங்களுக்கு எளிதாக இருந்து இருக்காது’ என்று தெரிவித்தார்.

ஆட்டத்தின் போக்கை மாற்றியது

தோல்வி குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்த ஆட்டத்தில் நாங்கள் நன்றாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். பந்து வீச்சில் முதல் 6 ஓவர்களில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. அந்த 6 ஓவர்களில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தோம். இதுபோன்று ரன்களை விட்டுக்கொடுத்து விட்டு சரிவில் இருந்து மீண்டு வருவது என்பது எப்பொழுதுமே கடினமானதாகும். ஹர்திக் பாண்ட்யா கொடுத்த கேட்ச் வாய்ப்பை நாங்கள் கோட்டை விட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. எஞ்சிய 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் எங்களுக்கு நெருக்கடி இருக்கிறது. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து பொறுமையுடனும், உற்சாகமுடனும் விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.


Next Story