கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி + "||" + World Cup cricket tournament Ambati Rayudu not included in the Indian team Shocking

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவை சேர்க்காதது அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது குறித்து விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யாதது விவாதத்திற்குரியது தான். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஏறக்குறைய சராசரி 48 ரன் வைத்துள்ள அதுவும் 33 வயதுடைய ஒரு வீரரை (அம்பத்தி ராயுடு) சேர்க்காதது மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமானது. மற்ற வீரர்கள் தேர்வில் புறக்கணிக்கப்பட்டதை விட ராயுடுவை சேர்க்காதது தான் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், இதயத்தை நொறுக்குவதாகவும் உள்ளது.

ராயுடுவுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். 2007–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனக்கும் இதே நிலை ஏற்பட்டது. உலக கோப்பை போட்டிக்கு நம்மை தயார்படுத்தி வரும் நிலையில் அணியில் இடம் இல்லை என்றால் அதனால் ஏற்படும் வேதனை எத்தகையது என்பதை நான் அறிவேன். உலக கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்பது தான் இளம் வயதில் இருந்தே ஒரு வீரரின் கனவாக இருக்கும். அதனால் தான் நான் ராயுடுவுக்காக வருந்துகிறேன்.

ரிஷாப் பான்ட் குறித்து...

ரிஷாப் பான்ட் சேர்க்கப்படாதது அவருக்கு அது பின்னடைவு என்று சொல்ல முடியாது. அவர் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார். அதனால் அவருக்கு இது பின்னடைவு அல்ல. அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். இதே போல் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்வு விவகாரம் குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கக்கூடாது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் நீண்ட காலமாக மாற்று விக்கெட் கீப்பராக இருந்துள்ளார். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் சொன்னது போல், விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்தவராக இருக்கலாம். அது மட்டுமின்றி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றலும் அவருக்கு உண்டு. அந்த அடிப்படையிலும் தேர்வாளர்கள் யோசித்து இருக்கலாம்.

உலக கோப்பையோடு திரும்புங்கள்

ஆனால் என்னை கேட்டால், 2–வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் பொருத்தமானவர் என்று சொல்வேன். பேட்டிங்கில் 4–வது வரிசையில் ஆடுவதற்குரிய திறமை அவரிடம் இருக்கிறது. மொத்தத்தில் அணியில் யார் இருக்கிறார்கள், யார் இல்லை என்பது முக்கியம் அல்ல. உலக கோப்பையை வென்று நாட்டிற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கம்பீர் கூறினார்.

மற்றொரு இந்திய முன்னாள் வீரர் முரளிகார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் அம்பத்தி ராயுடுவுக்காக வருத்தப்படுகிறேன். அவர் 4–வது வரிசையில் வேகப்பந்து வீச்சையும், சுழற்பந்து வீச்சையும் நன்றாக எதிர்கொண்டு ஆடக்கூடியவர்.

விஜய் சங்கரை காட்டிலும் அம்பத்தி ராயுடு நல்ல சராசரி வைத்துள்ளார். நடுநிலையோடு, ஒரு கிரிக்கெட் வீரராக கருத்து சொல்ல வேண்டும் என்றால் மிடில் வரிசையில் விஜய் சங்கரை விட ராயுடு சிறப்பாக விளையாடக்கூடியவர். ராயுடுவின் கடந்த கால ஆட்டங்கள், சராசரியை பார்த்து தான் இதை சொல்கிறேன்’ என்றார்.

தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘உலக கோப்பை அணிக்கு தேர்வானதால் பரவசத்தில் உள்ளேன். இதன் மூலம் இந்த (உலக கோப்பை) இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. ஒரு அணியாக நாங்கள் நிறைய சாதித்து இருக்கிறோம். அந்த பயணத்தில் நானும் பங்கெடுத்து இருக்கிறேன். அதனால் தான் இந்த அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பேட்ஸ்மேனாக ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. 4–வது வரிசையில் அணிக்கு வலு சேர்க்கக்கூடிய அளவுக்கு திறமை எனக்கு உண்டு. நல்ல நிலையில் இருந்தும், ஆஸ்திரேலிய தொடருக்கு என்னை தேர்வு செய்யாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நன்றாகவும், வலுவாகவும் உள்ளது. உலக கோப்பை போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். அணியாக ஒன்றிணைந்ததும் அசத்த தொடங்கி விடுவோம்’ என்றார்.

விஜய் சங்கரை கிண்டல் செய்த ராயுடு

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4–வது வரிசைக்கு அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்–ரவுண்டர் விஜய் சங்கரை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளிக்கும் போது, ‘விஜய் சங்கர், நன்கு பேட்டிங் செய்வார். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் சிறப்பாக பந்து வீசுவார். அத்துடன் அவர் நல்ல பீல்டர். அவரது முப்பரிமாண திறமையை கருத்தில் கொண்டே அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்’ என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தனக்கு அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் இருக்கும் அம்பத்தி ராயுடு, விஜய் சங்கரை மறைமுகமாக கிண்டல் செய்து இருக்கிறார். ஐதராபாத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக புதிய 3 டி கண்ணாடியை இப்போது தான் ஆர்டர் செய்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும்: கங்குலி
இந்தியா -வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
5. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.