இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி


இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 9:52 PM GMT)

‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

துபாய், 

‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

ரவிசாஸ்திரி பேட்டி

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கேப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது மிகவும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். 4–வது வீரர் வரிசையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட வீரரையே களம் இறக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும். முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடுகளத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றை பொறுத்தே 4–வது வரிசை வீரர் முடிவு செய்யப்படுவார்.

இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு

இந்திய அணி விராட்கோலியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘டாப்–3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோலி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியை தான் சாரும்.

கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பன்முகத்தன்மை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். அதனால் தொடக்கத்தில் அவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள அணியாக விளங்குகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த அணியையும், எந்த அணியாலும் வீழ்த்த முடியும். உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story