உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து உத்தேச அணி அறிவிப்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லை


உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து உத்தேச அணி அறிவிப்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லை
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 9:56 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் இல்லை.

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் இல்லை.

இங்கிலாந்து அணி

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மே) 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணியை ஏப்ரல் 23–ந்தேதிக்குள்ளும், இறுதிப்பட்டியலை மே 23–ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.

இந்த போட்டியை நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு உத்தேச அணியின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஜோப்ரா ஆர்ச்சர் யார்?

24 வயதான ஜோப்ரா ஆர்ச்சர், வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படோசில் பிறந்தவர். இவரது தந்தை இங்கிலாந்து நாட்டவர். தாயார் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீசில் ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் அதன் பிறகு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்கு குறைந்தது 7 ஆண்டு இங்கிலாந்தில் வசிக்க வேண்டும் என்ற விதிமுறையை 3 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தளர்த்தியது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்காக ஆடும் தகுதியை ஆர்ச்சர் கடந்த மாதம் எட்டினார்.

ஏற்கனவே இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளிலும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளிலும் மிரட்டலாக பந்து வீசி வரும் அவரை உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக வலுப்பெற்றது. அதே சமயம் அவருக்கு வாய்ப்பு அளிப்பதற்காக மற்றொரு இங்கிலாந்து வீரரை பலிகடாவாக்கக்கூடாது என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

15 வீரர்கள் விவரம்

இந்த சர்ச்சைக்கு மத்தியில் ஜோப்ராவுக்கு இங்கிலாந்து உலக கோப்பை உத்தேச அணியில் இடம் வழங்கப்படவில்லை. இங்கிலாந்து உத்தேச அணி வருமாறு:– இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயீன் அலி, அடில் ரஷித், லியாம் பிளங்கெட், டாம் குர்ரன், டேவிட் வில்லி, மார்க் வுட்.

இங்கிலாந்து அணி, உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் (மே 8–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை) விளையாடுகிறது. இந்த போட்டிக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மேற்கண்ட 15 வீரர்களோடு கூடுதலாக ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்படும். அனேகமாக இந்த 15 பேரில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. இதில் யாராவது காயமடைந்தால் மட்டுமே மாற்றம் இருக்கும்.

தாயகம் திரும்பும் ஐ.பி.எல். வீரர்கள்

முன்னதாக அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒரு 20 ஓவர் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஆடுகிறது. இவ்விரு ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் அங்கம் வகிக்கிறார். இதன் மூலம் ஜோப்ரா ஆர்ச்சர் முதல்முறையாக சர்வதேச போட்டியில் கால்பதிக்க உள்ளார்.

தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் பேர்ஸ்டோ (ஐதராபாத் அணி), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் (3 பேரும் ராஜஸ்தான் அணி), மொயீன் அலி (பெங்களூரு அணி) ஆகிய இங்கிலாந்து வீரர்கள் வருகிற 26–ந்தேதிக்குள் தாயகம் திரும்பும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Next Story