ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி விராட் கோலி சதம் அடித்தார்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி விராட் கோலி சதம் அடித்தார்
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 8:19 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

கொல்கத்தா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

டிவில்லியர்ஸ் நீக்கம்

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் இரு மாற்றமாக காயமடைந்த டிவில்லியர்ஸ் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென் சேர்க்கப்பட்டார். இதே போல் ஸ்டெயின், 9 ஆண்டுக்கு பிறகு பெங்களூரு அணிக்கு திரும்பினார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேப்டன் விராட் கோலியும், பார்த்தீவ் பட்டேலும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். தடுமாற்றத்துடன் ஆரம்பித்த பார்த்தீவ் பட்டேல் 11 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த அக்‌ஷ்தீப் நாத் 13 ரன்னில் வீழ்ந்தார். முதல் 9 ஓவர்களில் அந்த அணி 60 ரன்களே எடுத்தது.

அசத்திய கோலி-மொயீன் அலி கூட்டணி

3-வது விக்கெட்டுக்கு மொயீன் அலி இறங்கினார். அதன் பிறகே ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடி காட்டிய மொயீன் அலி ஸ்கோரை மளமளவென எகிற வைத்தார். குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி நொறுக்கிய மொயீன் அலி 66 ரன்களில் (28 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். அதன் பிறகு விராட் கோலி ருத்ரதாண்டவமாடினார். கோலியின் சரவெடி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. கடைசி 2 பந்து இருந்த போது அவரது செஞ்சுரிக்கு 4 ரன் தேவைப்பட்டது. பவுண்டரி அடித்து தனது 5-வது சதத்தை எட்டிய கோலி இறுதி பந்தில் கேட்ச் ஆனார். இந்த சீசனில் சதம் அடித்த 5-வது வீரர் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலி 100 ரன்கள் (58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் 91 ரன்கள் திரட்டி பிரமிக்க வைத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. நடப்பு தொடரில் பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மார்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பெங்களூரு அணி வெற்றி

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் 1 ரன்னுடனும், சுனில் நரின் 18 ரன்னுடனும் மற்றும் சுப்மான் கில் 9 ரன்னுடனும், ராபின் உத்தப்பா 9 ரன்னுடனும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதனால் அந்த அணி 11.5 ஓவர்களில் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு அதிரடி ஆட்டக்காரர் ரஸ்செல், நிதிஷ் ராணாவுடன் இணைந்தார். இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தி அணியின் ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்தினார்கள். கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத நிதிஷ் ராணா 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ரஸ்செல் (65 ரன்கள், 25 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்) 4-வது பந்தில் ரன் எடுக்காததுடன், 5-வது பந்தில் ‘ரன்-அவுட்’ ஆனார். கடைசி பந்தை நிதிஷ் ராணா சிக்சருக்கு விரட்டினாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே வந்தது. 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்து 2-வது வெற்றியை ருசித்தது. நிதிஷ் ராணா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 85 ரன்னும், கேப்டன் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Next Story