மும்பை அணியிடம் தோல்வி: கடைசி 3 ஓவரில் விட்டுக்கொடுத்த ரன் ஆட்டத்தின் போக்கை மாற்றியது டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து


மும்பை அணியிடம் தோல்வி: கடைசி 3 ஓவரில் விட்டுக்கொடுத்த ரன் ஆட்டத்தின் போக்கை மாற்றியது  டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து
x
தினத்தந்தி 19 April 2019 10:00 PM GMT (Updated: 19 April 2019 8:37 PM GMT)

‘மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி 3 ஓவர்களில் நாங்கள் விட்டுக்கொடுத்த ரன் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது’ என்று டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

‘மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி 3 ஓவர்களில் நாங்கள் விட்டுக்கொடுத்த ரன் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது’ என்று டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

மும்பை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 34–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6–வது வெற்றியை ருசித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயித்த 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. ஆல்–ரவுண்டராக ஜொலித்த மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா (15 பந்தில் 32 ரன் மற்றும் ஒரு விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘முதல் 2 ஓவருக்கு பிறகு 140 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். கைவசம் விக்கெட்டுகள் இருந்ததால் கடைசி கட்டத்தில் எங்களது அதிரடி வீரர்கள் துரிதமாக செயல்பட்டு கணிசமாக ரன்கள் சேர்த்தனர். எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் தரம் வாய்ந்தவர்கள் என்பது தெரியும். அவர்கள் தங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினார்கள். ராகுல் சாஹர் அருமையாக பந்து வீசினார். அவர் திட்டமிட்டபடி பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது நன்றாக இருந்தது. கேப்டனாக அவர் மீது நம்பிக்கை வைத்தால் அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பந்து வீசுவார்’ என்று தெரிவித்தார்.

கடைசி 3 ஓவர்கள்...

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘உள்ளூர் ஆட்டங்களில் அதுவும் இத்தகைய ஆடுகளத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது. துரதிருஷ்டவசமாக ‘டாசை’ இழந்ததுடன் 3 துறைகளிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். மெதுவான ஆடுகளத்தில் தான் பயிற்சி மேற்கொண்டோம். ஆனால் போட்டிக்கான ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதுபோன்ற சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் விட்டுக்கொடுத்து விட்டோம். குறிப்பாக கடைசி 3 ஓவர்கள் தான் ஆட்டத்தின் போக்கை (3 ஓவர்களில் 50 ரன்) மாற்றி விட்டது’ என்றார்.

அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த மும்பை அணி வீரர் குருணல் பாண்ட்யா அளித்த பேட்டியில், ‘காயம் மற்றும் இடைநீக்கம் காரணமாக விளையாட முடியாமல் போன காலத்தை ஹர்திக் பாண்ட்யா தனது உடல் தகுதியை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தினார். கிரிக்கெட் தவிர வேறு எதற்கும் முன்னுரிமை இல்லை என்று செயல்படக்கூடிய வீரர்களில் ஒருவரான அவர் ஆட்டத்துக்காக அதிகம் உழைப்பவர். எப்பொழுதும் ஆட்டத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்பது தான் அவரது லட்சியமாகும். ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டால் நிலையான திறனை வெளிப்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது ஆட்டத்தில் புதிய வி‌ஷயம் ஏதாவது புகுத்துபவர். தன்னம்பிக்கை கொண்ட அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். இந்த ஆடுகளம் கணிக்கமுடியாததாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யா அடித்து ஆடிய விதம் ஆட்ட உத்வேகத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றியது. நாங்கள் எதிர்பார்த்ததை விட 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக எடுத்தோம்’ என்று கூறினார்.


Next Story