ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 19 April 2019 9:15 PM GMT (Updated: 19 April 2019 8:51 PM GMT)

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி என்று 4 புள்ளியுடன் 7–வது இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்– மும்பை இந்தியன்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: இரவு 4 மணி

ரஹானே கேப்டன் ரோகித் சர்மா

நட்சத்திர வீரர்கள்

ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் கோபால்

ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட், மலிங்கா

இதுவரை நேருக்கு நேர் 19

9 வெற்றி 10 வெற்றி

மும்பை அணியை கட்டுப்படுத்துமா ராஜஸ்தான்?

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வி என்று 4 புள்ளியுடன் 7–வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 6 ஆட்டங்களில் குறைந்தது 5–ல் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஏற்கனவே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலைமையில் அடுத்த வாரத்தில் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இருவரும் தாயகம் (இங்கிலாந்து) திரும்பி விடுவார்கள். பேட்ஸ்மேன்கள் ஒருசேர கைகொடுக்காததால் தான் ராஜஸ்தான் ரணகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் சுமித்தும் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே மும்பை அணியை அவர்களது இடத்திலேயே 188 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்திருப்பது ராஜஸ்தானுக்கு சற்று நம்பிக்கை அளிக்கிறது. அதே வேகத்துடன் சொந்த ஊரிலும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முடியும். மும்பை பேட்ஸ்மேன்கள் தொடக்க கட்டத்திலும், இறுதி கட்டத்திலும் அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்கள். ஆனால் மிடில் வரிசையில் ரன்ரேட் மந்தமாகி விடுகிறது. எனவே பொல்லார்ட்டை முன்வரிசையில் இறக்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, இளம் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் மிரட்டுகிறார்கள். பேட்டிங்கில் பாண்ட்யா சகோதரர்கள், கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக், பொல்லார்ட் சூப்பர் பார்மில் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, மும்பை அணியின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்– கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் அஸ்வின்

நட்சத்திர வீரர்கள்

தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், ரபடா, அக்‌ஷர் பட்டேல்

கெய்ல், லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், முகமது ‌ஷமி

இதுவரை நேருக்கு நேர் 23

9 வெற்றி 14 வெற்றி

உள்ளூரில் எழுச்சி பெறுமா டெல்லி அணி?

தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங், ஆலோசகர் சவுரவ் கங்குலி ஆகியோரின் பட்டை தீட்டுதலில் இந்த சீசனில் எழுச்சியுடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உள்ளூரில் மட்டும் தடுமாறுவது ஆச்சரியம் அளிக்கிறது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 3–ல் தோற்று இருக்கிறது. எஞ்சிய ஒரு வெற்றியும் ‘டை’யில் முடிந்து சூப்பர் ஓவர் வரை போராடியே கிடைத்தது. ஆனால் வெளியூர் ஆடுகளங்களில் (5 ஆட்டத்தில் 4–ல் வெற்றி) கலக்குகிறார்கள். டெல்லி ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாக (ஸ்லோ) காணப்படுகிறது. ஏற்கனவே இதை மோசமான பிட்ச் என்று ரிக்கிபாண்டிங் விமர்சித்தார். ஷிகர் தவான், பிரித்வி ஷா, பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பொறுமையுடன் நிலைத்து நின்று ஆடினால் சாதிக்கலாம். அது மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு முக்கிய பங்கு வகிப்பார்கள்.

டெல்லி அணியை போன்றே கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. ஏற்கனவே டெல்லிக்கு எதிராக மொகாலியில் நடந்த ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (26 சிக்சருடன் 352 ரன்), லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 4 அரைசதத்துடன் 387 ரன்) மயங்க் அகர்வால் (225 ரன்) சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அஸ்வின், முருகன் அஸ்வின், முஜீப் ரகுமான் ஆகியோரின் சுழல் ஜாலமும் பஞ்சாப் அணிக்கு பக்கபலமாக இருப்பதால், மறுபடியும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


Next Story