பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்


பெண்கள் குறித்து அவதூறு கருத்து: ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 2019-04-21T01:58:13+05:30)

பெண்கள் குறித்து அவதூறு கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி, 

பெண்கள் குறித்து அவதூறு கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

சர்ச்சையில் சிக்கிய வீரர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் ‘காபி வித் கரண்’ என்ற டி.வி. பொழுது போக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கினர்.

பார்ட்டிக்கு செல்லும் போது பெண்களை ஜாலியாக நோட்டமிடல், முதல்முறையாக செக்ஸ் உறவில் ஈடுபட்டது என்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டி பாண்ட்யா கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். அவரின் கருத்தை ஆமோதிப்பது போல் ராகுல் நடந்து கொண்டார். இதையடுத்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட அவர்கள் ஆஸ்திரேலிய தொடரில் இருந்தும் நீக்கப்பட்டு பாதியிலேயே தாயகம் திரும்பினர். தங்களது கருத்துக்கு இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்கள் மீதான இடைநீக்கம் விலக்கி கொள்ளப்பட்டு மறுபடியும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

அபராதம் விதிப்பு

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் முழுமையாக விசாரித்தார். அவர் முன் இரண்டு பேரும் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர்.

இந்த நிலையில் விசாரணை நிறைவடைந்து அவர்கள் மீதான தண்டனை விவரத்தை டி.கே.ஜெயின் நேற்று அறிவித்தார். இதன்படி இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சத்தை அபராதமாக விதித்தார்.

இந்த அபராதத்தில் இருவரும் தலா ரூ.10 லட்சத்தை எடுத்து பணியின் போது உயிரிழந்த துணை ராணுவப்படையை சேர்ந்த காவலர்களின் மனைவி 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பிரித்து வழங்க வேண்டும். எஞ்சிய தலா ரூ.10 லட்சத்தை பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் தனியாக நிதியம் உருவாக்கி அதில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த அபராத தொகையை அடுத்த 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் அவர்களது போட்டி கட்டணத்தில் இருந்து அந்த தொகையை பிடித்தம் செய்து அதை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பொறுப்புடன் இருங்கள்

கிரிக்கெட் வீரர்களை இளைஞர்கள் முன்மாதிரியாக பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட் மதம் போன்று போற்றப்படுகிறது. இதனால் வீரர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டி.கே.ஜெயின் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஏற்கனவே பாண்ட்யாவும், ராகுலும் இடைநீக்கம் என்ற தண்டனையை அனுபவித்து விட்டனர். அதுமட்டுமின்றி தவறை உணர்ந்து எழுத்துபூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டனர். மேலும் உலக கோப்பை அணிக்கும் தேர்வாகியுள்ளனர். அதனால் அவர்கள் மீது அபராதத்தை தவிர, மேற்கொண்டு நடவடிக்கை தேவையில்லை என்றும் டி.கே.ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

கங்குலி விவகாரம்

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு வழங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் கங்குலி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார். ஆதாயம் பெறும் வகையில் விதிமுறைக்கு புறம்பாக ஒரே நேரத்தில் இரட்டை பொறுப்பு வகிப்பதாக கங்குலி மீது மேற்கு வங்காளத்தை சேர்ந்த மூன்று ரசிகர்கள் புகார் கூறினர். இந்த வி‌ஷயத்தில் இரண்டு தரப்பினரையும் விசாரித்த டி.கே.ஜெயின் எழுத்துபூர்வமாக அறிக்கை சமர்பிக்குமாறும், அதன் பிறகு உரிய உத்தரவு பிறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story