கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான் + "||" + The teams. Cricket: The Mumbai team blew Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாய்த்தது.

ஜெய்ப்பூர், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாய்த்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் விழாவில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெய்ப்பூரில் நடந்த 36–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவசரமாக சொந்த நாட்டுக்கு (இங்கிலாந்து) புறப்பட்டு சென்று விட்டார். இதே போல் திரிபாதிக்கும் இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ், ரியான் பராக் சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணி 161 ரன்

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா (5 ரன்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கினாலும், குயின்டான் டி காக்கும், சூர்யகுமார் யாதவும் அணியை நிமிர வைத்தனர். தவால் குல்கர்னியின் ஒரே ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை ஓடவிட்டு அட்டகாசப்படுத்தினார்.

ஸ்கோர் 108 ரன்களாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. சூர்யகுமார் 34 ரன்னில் கேட்ச் ஆனார். குயின்டான் டி காக் 65 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். இறுதி கட்டத்தில் 2 ரன் மற்றும் 14 ரனில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து (இரண்டு முறையும் ஜோப்ரா ஆர்ச்சர் நழுவ விட்டார்) தப்பித்த ஹர்திக் பாண்ட்யா 23 ரன்னில் (15 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். முன்னதாக பொல்லார்ட் 10 ரன்னில் கிளீன் போல்டு ஆனார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலும், சில கேட்ச் வாய்ப்புகளை வீணடித்த ஜோப்ரா ஆர்ச்சரும் பந்து வீச்சில் எதிரணியின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் வெற்றி

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் ரஹானேவும், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் அதிரடியான தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 39 ரன்களை (3.4 ஓவர்) எட்டிய போது ரஹானே 12 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித் இறங்கி நிலைத்து நின்று விளையாடினார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் (35 ரன்), அடுத்து வந்த ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (0) ஆகியோருக்கு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் ஒரே ஓவரில் ‘செக்’ வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஸ்டீவன் சுமித்துடன், 17 வயதான ரியான் பராக் கைகோர்த்து அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார். அபாரமாக ஆடிய ரியான் பராக் துரதிர்ஷ்டவசமாக 43 ரன்னில் (29 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆகிப்போனார். அடுத்து வந்த ஆஷ்டன் டர்னர் டக்–அவுட் ஆனாலும், அதனால் எந்த தாக்கமும் இல்லை.

ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் சுமித் 59 ரன்களுடன் (48 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 9–வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது 3–வது வெற்றியாகும். இந்த சீசனில் மும்பை அணியை 2–வது முறையாக தோற்கடித்து இருக்கிறது. மும்பை அணிக்கு விழுந்த 4–வது அடி இதுவாகும்.

ஸ்டீவன் சுமித் கருத்து

ஆட்டநாயகன் விருது பெற்ற ராஜஸ்தான கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘மற்ற அணிகளின் முடிவுகள் பற்றி கவலைப்படாமல் எங்களது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப்போட்டி போன்று நினைத்து ஆடுவோம். ரியான் பராக்கிடம் அபாரமான திறமை இருக்கிறது. 17 வயதிலேயே அவரிடம் வலுவான சக்தி இருப்பதை அறிந்து வியந்தேன். எந்த வித நெருக்கடியும் இன்றி அவர் தொடர்ந்து இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்றார்.