கிரிக்கெட்

கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம் + "||" + Hyderabad team to defeat Kolkata 5th winner

கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம்

கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடிய ஐதராபாத் அணி 5–வது வெற்றியை சுவைத்தது. வார்னரும், பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினர்.

ஐதராபாத், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடிய ஐதராபாத் அணி 5–வது வெற்றியை சுவைத்தது. வார்னரும், பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினர்.

குல்தீப் யாதவ் நீக்கம்

12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இதில் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்த 38–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன. ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் உத்தப்பா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங், கரியப்பா மற்றும் அறிமுக வீரராக பிரித்வி ராஜ் ஆகியோர் இடம் பிடித்தனர்.

ஜோடியை பிரித்த கலீல்

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின்னும், சுனில் நரினும் ஓரளவு நல்ல தொடக்கத்தை தந்தனர். 3–வது ஓவரில் கலீல் அகமதுவின் பந்து வீச்சில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி தொடர்ச்சியாக விரட்டிய சுனில் நரின் (25 ரன், 8 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தில் லெக்–ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த சுப்மான் கில்லும் (3 ரன்) அவரது பந்து வீச்சுக்கே இரையானார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தன. கேப்டன் தினேஷ் கார்த்திக் (6 ரன்) 2–வது ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்–அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 51 ரன்களில் (47 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.–ல் அவரது மந்தமான அரைசதம் இதுவாகும். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தனது 3 ஓவர்களில் வெறும் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ரஸ்செல் 15 ரன்

கொல்கத்தா அணியை பொறுத்தவரை எல்லோரது எதிர்பார்ப்பும் ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் மீது தான் இருக்கும். 18–வது ஓவரில் அவர் இறங்கினார். புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட ரஸ்செல் (15 ரன், 9 பந்து) அதே ஓவரில் லெக்–சைடில் தாழ்வாக வந்த புல்டாஸ் பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே ரஷித் கானால் கேட்ச் செய்யப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

வார்னார்– பேர்ஸ்டோ கலக்கல்

அடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோனும் களம் புகுந்தனர். அபாயகரமான ஜோடியாக வர்ணிக்கப்படும் இவர்கள், கொல்கத்தாவின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்தனர். பேர்ஸ்டோவுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை கரியப்பா தவற விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை பேர்ஸ்டோ கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

சிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்ட இவர்கள் ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவர்களில் 72 ரன்கள் திரட்டினர். 8.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இந்த சீசனில் இவர்கள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தருவது இது 4–வது முறையாகும். அத்துடன் இருவரும் அரைசதத்தையும் கடந்தனர். பேர்ஸ்டோ 55 ரன் மற்றும் 58 ரன்களிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தார்.

ஐதராபாத் வெற்றி

ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது (12.2 ஓவர்) டேவிட் வார்னர் 67 ரன்களில் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பிரித்விராஜியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். மறுமுனையில் கொல்கத்தா பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பேர்ஸ்டோ 15–வது ஓவரில் பவுண்டரியும், தொடர்ந்து 2 சிக்சரும் விளாசி உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தியதோடு இலக்கையும் எட்ட வைத்தார்.

ஐதராபாத் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 80 ரன்களுடனும் (43 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), வில்லியம்சன் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

9–வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 5–வது வெற்றியாகும். இதன் மூலம் முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 10–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 6–வது தோல்வியாகும். கடந்த 5 ஆட்டங்களில் கொல்கத்தா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன்கள் கருத்து

ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘கொஞ்சம் மெதுவான தன்மையுடன் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் எதிரணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். இது ஒரு நிறைவான செயல்படாகும். அது தொடரும் என்று நம்புகிறேன். வார்னரும், பேர்ஸ்டோவும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போது, அது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்’ என்றார்.

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘நன்றாக பவுலிங் செய்தால் 160 ரன்கள் இலக்கு என்பது சவாலானதாக இருக்கும் என்று நினைத்தேன். எங்களது பந்து வீச்சு எடுபடவில்லை. வார்னரும், பேர்ஸ்டோவும் உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தனர். எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. பேர்ஸ்டோவுக்கு ஆரம்பத்தில் கேட்ச்சை கோட்டை விட்டது பின்னடைவை ஏற்படுத்தியது. நாங்கள் பீல்டிங்கில் நிறைய முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

3 விக்கெட் வீழ்த்திய ஐதராபாத் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான கலீல் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார். ‘ஆட்டநாயகன் விருதை வெல்ல வேண்டும் என்று எனது தாயார் என்னிடம் அடிக்கடி சொல்வார். அவருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்று கலீல் குறிப்பிட்டார்.

500 ரன்களை கடந்தார், வார்னர்

ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நடப்பு தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 6 அரைசதம் உள்பட 517 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் இவர் தான். ஒரு சீசனில் அவர் 500 ரன்களை தாண்டுவது இது 5–வது நிகழ்வாகும்.

அந்த அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 445 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.–ல் அறிமுக சீசனிலேயே அதிக ரன்கள் சேர்த்த வீரர் (முதலாவது ஐ.பி.எல். தொடரை தவிர்த்து) என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2015–ம் ஆண்டில் அறிமுகம் ஆன ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அந்த ஆண்டில் 439 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.