கிரிக்கெட்

‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து + "||" + MS Dhoni gave us a massive scare: Virat Kohli

‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து

‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து
‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூரு அணி, சென்னையை தோற்கடித்தது இதுவே முதல்முறையாகும்.


பெங்களூரு அணி நிர்ணயித்த 162 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு களம் கண்ட கேப்டன் டோனி கடைசி வரை நின்று பெங்களூரு அணிக்கு கிலியை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரில் டோனி 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில் இறுதி பந்தை அடித்து ஆட முற்பட்ட டோனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பந்து பேட்டில் படாவிட்டாலும் ஒரு ரன் ஓடி ஆட்டத்தை ‘டை’ ஆக்க டோனி முயற்சித்தார். ஆனால் மறுமுனையில் நின்ற ஷர்துல் தாகூரை, பெங்களூரு அணி விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் அபாரமாக ‘ரன்-அவுட்’ செய்து சென்னை அணியின் வெற்றி முனைப்புக்கு முட்டுக்கட்டை போட்டார். சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து ஏமாற்றத்தை சந்தித்தது.

சென்னை அணி கேப்டன் டோனி 48 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர் போட்டியில் டோனியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 19-வது ஓவரில் நவ்தீப் சைனி பந்து வீச்சில் டோனி சிக்சர் விளாசி ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டோனி (203 சிக்சர்கள்) 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) 323 சிக்சர்களுடன் முதலிடத்திலும், டிவில்லியர்ஸ் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) 204 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றனர். முன்னதாக இந்த ஆட்டத்தில் டோனி 44 ரன்களை எட்டிய போது ஐ.பி.எல். போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை தனதாக்கினார். பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில ஆட்டங்களில் நாங்கள் சிறிய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். டோனி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு கடைசி வரை பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். கடைசி பந்தில் ‘ரன்-அவுட்’ ஏற்படலாம் என்று எதிர்பார்த்தோம். இந்த ஆட்டம் உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது. எங்கள் அணியினர் நேர்த்தியாக பந்து வீசினார்கள். 19-வது ஓவர் வரை எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. சிறிய ஆடுகளமான இதில் 160 ரன்னுக்குள் சென்னை அணியை கட்டுப்படுத்தியது பெரிய விஷயமாகும். முதல் 6 ஓவர்கள் பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. இருப்பினும் பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ் நன்றாக பேட்டிங் செய்தனர். நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்ததாக நினைத்தோம். 20 ஓவர் போட்டியில் சரிவில் இருந்து எப்படி நன்றாக மீண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம். இந்த ஆட்டம் அதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கருத்து தெரிவிக்கையில், ‘ஆடுகளத்தின் தன்மை கணிக்க முடியாததாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை நல்ல ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தினார்கள். பேட்டிங்கில் எங்கள் தொடக்கம் சரியாக அமையவில்லை. விரைவில் விக்கெட்டுகளை இழந்தோம். அப்படி விக்கெட் இழந்தால் அது மிடில் ஆர்டரை நிச்சயம் பாதிக்கும். புதிதாக களம் இறங்கும் வீரர்கள் உடனடியாக அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. நாங்கள் சில பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது எங்களுக்கு பாதிப்பாக அமைந்தது. பந்துக்கும், தேவையான ரன்னுக்கும் வித்தியாசம் அதிகம் இருந்ததால் தான் ஒரு ரன் எடுப்பதற்காக நான் ஓடவில்லை. இது ஒரு சிறப்பான ஆட்டமாக அமைந்தது’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
2. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி
புரோ கபடி போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.
3. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் 35-33 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணி தோல்வியடைந்தது.
4. புரோ கபடி: புனேயிடம் வீழ்ந்தது பெங்களூரு
புரோ கபடி போட்டியில், புனே அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
5. சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது -தேர்வுக் குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...