‘டோனி, பிளமிங் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் நெகிழ்ச்சி


‘டோனி, பிளமிங் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 24 April 2019 9:45 PM GMT (Updated: 24 April 2019 8:16 PM GMT)

‘டோனி, பிளமிங் ஆகியோர் என் மீது வைத்து இருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன்’ என்று சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் தெரிவித்தார்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி 8-வது வெற்றியை பெற்றதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி நிர்ணயித்த 176 ரன் இலக்கை சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 96 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். முதல் 10 ஆட்டங்களில் வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய ஷேன் வாட்சன் இந்த சீசனில் முதல்முறையாக அரைசதத்தை கடந்து நிம்மதி அடைந்திருக்கிறார்.

முதுகுவலி குறித்து டோனி கருத்து

வெற்றிக்கு பிறகு சென்னை கேப்டன் டோனி கூறுகையில் ‘குறிப்பிட்ட வீரர்களுக்கு சில ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஷேன் வாட்சன் மேட்ச் வின்னர். அவருக்கு நாங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். அத்துடன் அவர் வலைப்பயிற்சியில் நன்கு பேட்டிங் செய்தார். அவர் நிலைத்து நின்று விட்டால் எப்படி ஆடுவார் என்பது தெரியும். சில வீரர்கள் பார்முக்கு வந்து இருப்பது நல்ல விஷயமாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங்கில் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

எனக்கு முதுகுவலி தொல்லை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட போட்டி நெருங்குவதால், முதுகு வலி பிரச்சினை மோசமடையாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை முதுகுவலி மேலும் மோசம் அடைந்தால் நான் சிறிது காலம் ஓய்வு எடுத்து தான் ஆக வேண்டும். தற்போது இருக்கும் நிலையில் சில போட்டிகளில் ஆடலாம். முழு உடல் தகுதி பெற வேண்டும் என்று காத்திருந்தால் இரண்டு போட்டிகளில் விளையாட 5 வருட இடைவெளி கூட ஆகும்’ என்று தெரிவித்தார்.

நன்றி சொன்னால் போதாது

ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷேன் வாட்சன் அளித்த பேட்டியில் ‘கேப்டன் டோனியும், தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் என் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு வார்த்தையால் மட்டும் நன்றி சொன்னால் போதாது. இந்த ஆட்டத்தின் மூலம் அவர்களது நம்பிக்கையை காப்பாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பு நான் பல அணிகளில் விளையாடி இருக்கிறேன். மற்ற அணியில் இதுபோல் பல ஆட்டங்களில் ரன் எடுக்காமல் விளையாடி இருந்தால் என்னை எப்போதோ அணியில் இருந்து நீக்கி இருப்பார்கள். ஆனால் டோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் நான் சிறந்த இன்னிங்ஸ் ஆடுவேன் என்று நம்பிக்கை வைத்து இருந்தனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சிறப்பாக ஆடிய நம்பிக்கையோடு தான் ஐ.பி.எல். போட்டிக்கு வந்தேன். ஆனால் இங்கு ஆட்டத்தின் போக்கு எனக்கு ஏற்றதாக அமையாமல் போய் விட்டது. அது மட்டுமின்றி எனது பேட்டிங்கில் கொஞ்சம் உத்வேகத்தையும் இழந்து விட்டேன். நமது ஆட்டம் நல்ல வகையில் அமைய சற்று அதிர்ஷ்டமும் தேவையாகும்’ என்று கூறினார்.

Next Story