கிரிக்கெட்

பெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து + "||" + The failure of Bangalore team Punjab captain Aswin comment

பெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து

பெங்களூரு அணியிடம் தோல்வி: ‘கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கருத்து
‘கடைசி கட்ட பந்து வீச்சில் தங்கள் அணி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தெரிவித்தார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களே எடுக்க முடிந்தது.


பெங்களூரு அணி தனது கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்தது. ஆனால் பஞ்சாப் அணி தனது பேட்டிங்கில் கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதுவே இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்தது. 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 82 ரன்கள் விளாசிய பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட்கோலி கூறுகையில் ‘கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று இருக்கிறோம். எப்போதும் ஆட்டத்தை அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டும். அதற்கு இந்த ஆட்டம் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும். டிவில்லியர்ஸ்-மார்கஸ் ஸ்டோனிஸ் கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி காட்டினர். அவர்களது அபார ஆட்டத்தால் எதிர்பாராதவிதமாக எங்கள் அணி 200 ரன்னை தாண்டியது’ என்றார்.

அஸ்வின் கருத்து

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில் ‘20 ஓவர் போட்டி என்பது நெருக்கடியான தருணங்களில் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே அமையும். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் நெருக்கடியை திறம்பட கையாள முடியாமல் போய் விட்டது. மிடில் ஆர்டர் வரிசையில் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்தால் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும். ‘பிளே-ஆப்’ சுற்றை நோக்கி நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம். தற்போது எங்களுக்கு ஒரு வெற்றி கிட்டினால் அதன் பிறகு பெங்களூரு அணியை போல் சரியான உத்வேகத்துக்கு திரும்பி விட முடியும். வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது முக்கியமானதாகும். எங்களை எந்தவொரு அணியும் எளிதில் வெளியேற்றி விட முடியாது. பவர் பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் நாங்கள் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் எழுச்சி பெற்ற வேண்டிய தருணம் இதுவாகும்’ என்றார்.

கோலியால் ஆவேசம் அடைந்த அஸ்வின்

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களம் இறங்கிய அஸ்வின், உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் எல்லைக்கோடு அருகே கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கேட்ச் செய்ததும், ‘விராட்கோலி இது தான் உனது வலுவான ஷாட்டா?’ என்பது போல் சைகை காட்டி கிண்டல் செய்தார். இதனால் ஆவேசம் அடைந்த அஸ்வின் மைதானத்தை விட்டு வெளியேறும் போது தங்கள் அணி வீரர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை நோக்கி தனது கையுறையை தூக்கி எறிந்தபடி சென்றார். இந்திய அணிக்காக விளையாடும் அனுபவம் வாய்ந்த இந்த இரு வீரர்களின் செயல்பாட்டை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்தனர். நடந்த சம்பவம் குறித்து அஸ்வினிடம் கேட்ட போது, ‘விராட்கோலியை போல் நானும் கிரிக்கெட்டை அதீத ஆர்வத்துடன் தான் விளையாடுகிறேன். உணர்ச்சியின் வெளிப்பாட்டில் நடந்த சம்பவம் இதுவாகும்’ என்று பதிலளித்தார்.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் வேடிக்கையான சம்பவம் ஒன்று அரங்கேறியது. 14-வது ஓவர் முடிந்ததும் 2½ நிமிட வியூக இடைவெளி விடப்பட்டு பஞ்சாப் வீரர் அங்கித் ராஜ்புத் பந்து வீச வந்தார். ஆனால் அப்போது மைதானத்தில் பந்து இல்லை. இதையடுத்து அவர் கேப்டன் அஸ்வினிடம் கேட்டார். அவர் நடுவர் புருஸ் ஆக்சன்போர்டுவிடம் விசாரிக்க இந்த தேடுதல் படலம் நீண்டு கொண்டே போனது. ஆனால் பந்து எங்கு இருக்கிறது என்பதற்கு உடனடியாக விடைகிடைக்கவில்லை. எல்லா தரப்பினரும் பந்து இல்லை என்றதும் வீரர்கள் மத்தியில் சிரிப்பு எழ, மைதான நடுவர், 4-வது நடுவரை அழைத்து வேறு பந்து கொண்டு வர பணித்தார். பந்து பெட்டி வந்த போது, காணாமல் போன பந்து எங்கு சென்றது என்பதை முந்தைய ஓவர் வீடியோ பதிவின் மூலம் சோதித்த போது அது சக நடுவரான ஷம்சுதீன் பேன்ட் பாக்கெட்டில் இருப்பது தெரியவந்தது. பிறகு அவர் அந்த பந்தை எடுத்து கொடுக்க போட்டி தொடர்ந்தது.