ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அமித் பன்ஹால், பூஜா ராணி தங்கம் வென்றனர்


ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அமித் பன்ஹால், பூஜா ராணி தங்கம் வென்றனர்
x
தினத்தந்தி 26 April 2019 10:15 PM GMT (Updated: 26 April 2019 8:25 PM GMT)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.

பாங்காக்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் கிம் இங்குவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். அரியானாவை சேர்ந்த 23 வயதான அமித் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் 2-3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்ஜோன் மிர்ஜாமிடோவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். 56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் மிராஜிஸ்பிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். 75 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் துர்சிபாயிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

பெண்களுக்கான 81 கிலோ பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அரியானாவை சேர்ந்த பூஜாராணி இந்த போட்டியில் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2012-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2015-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தார். 64 கிலோ பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 0-5 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான டு டானிடம் (சீனா) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி உள்பட 13 பதக்கங்கள் வென்றது.

Next Story