ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு


ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 27 April 2019 11:30 PM GMT (Updated: 27 April 2019 9:42 PM GMT)

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங் கனை கோமதிக்கு சென்னையில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

சென்னை,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30 வயதான கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த முடிகண்டம் கிராமமாகும். வறுமையான குடும்ப பின்னணியை கொண்ட கோமதி பல்வேறு சோகங்களுக்கு மத்தியிலும் போராடி சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார்.

இதேபோல் ஹாங்காங்கில் கடந்த மாதம் நடந்த ஆசிய இளையோர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா 2 தங்கப்பதக்கமும் (100 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல்), தமிழக வீரர் மாதேஷ் (800 மீட்டர் ஓட்டம்) வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தனர்.

ஆசிய போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த கோமதி, தபிதா, மாதேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா, சீனியர் துணைத்தலைவர்கள் சி.சைலேந்திரபாபு, ஆர்.சுதாகர், துணைத்தலைவர் ஷைனி வில்சன், காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்க தலைவர் அஜய் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். கோமதியின் தாயார் ராஜாத்தி உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பதக்கம் வென்ற கோமதி, தபிதா, மாதேஷ் ஆகியோருக்கு தங்கநாணயம் பரிசாக வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் தரப்பில் கோமதிக்கு ரூ.5 லட்சமும், தபிதாவுக்கு ரூ.3 லட்சமும், மாதேஷ்க்கு ரூ.2 லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் ‘தங்க மங்கை’ கோமதி பேசுகையில், ‘கடினமாக உழைத்தால் லட்சியத்தை நிச்சயம் எட்ட முடியும். என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு பலரும் உறுதுணையாக இருந்து இருக்கிறார்கள். நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் தடகள பயிற்சியில் தீவிரம் காட்டினேன். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டு குறித்த விழிப்புணர்வு எனக்கு அதிகம் இல்லை. பள்ளி பருவத்திலேயே மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது நான் கர்நாடகாவில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறேன். எனது வேலையை தமிழ்நாட்டுக்கு மாற்றி கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். உலக தடகளம் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்’ என்று தெரிவித்தார்.

Next Story