ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 27 April 2019 11:30 PM GMT (Updated: 27 April 2019 9:50 PM GMT)

இந்த ஆண்டில் வியப்புக்குரிய வகையில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: மாலை 4 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் விராட் கோலி

நட்சத்திர வீரர்கள்

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், ரபடா, அக்‌ஷர் பட்டேல்

டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்டோனிஸ், உமேஷ் யாதவ்

இதுவரை நேருக்கு நேர் 22 (டை1, முடிவில்லை1)

7 வெற்றி 13 வெற்றி

பெங்களூரு அணியின் எழுச்சி தொடருமா?

இந்த ஆண்டில் வியப்புக்குரிய வகையில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலேயே ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகி விடும். முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்து அசத்திய டெல்லி அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா (23 விக்கெட்) கலக்குகிறார். ஆனால் வெளியூரில் சாதிக்கும் அளவுக்கு உள்ளூர் ஆடுகளத்தில் தடுமாறி விடுகிறார்கள். அதாவது டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் 3–ல் தோல்வி கண்டுள்ளது.

முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த பெங்களூரு அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4–ல் வெற்றிக்கனியை பறித்து எழுச்சி பெற்றிருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. ‘நித்திய கண்டம்; பூரண ஆயுசு’ என்பது போல் ஒவ்வொரு ஆட்டத்தையும் கவனமாக எதிர்கொண்டு தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்டோர் பெங்களூரு அணியின் பேட்டிங்குக்கு தூண்களாக உள்ளனர். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்பு குறைவிருக்காது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– மும்பை இந்தியன்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

தினேஷ் கார்த்திக் கேப்டன் ரோகித் சர்மா

நட்சத்திர வீரர்கள்

கிறிஸ் லின், ரஸ்செல், சுனில் நரின், சுப்மான் கில், நிதிஷ் ராணா

குயின்டான் டி காக், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பும்ரா, மலிங்கா

இதுவரை நேருக்கு நேர் 23

5 வெற்றி 18 வெற்றி

அடுத்த சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் மும்பை

மூன்று முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2–வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மும்பை அணி அடுத்த சுற்றில் (பிளே–ஆப் வாய்ப்பு) நுழைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விடும். கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 109 ரன்னில் சுருட்டி பந்தாடிய பலம் வாய்ந்த மும்பை அணி அதே உத்வேகத்துடன் இந்த மோதலிலும் எதிரணியை போட்டுத்தாக்க ஆயத்தமாகி வருகிறது.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. இதில் கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருப்பதால் அந்த அணி வீரர்களின் நம்பிக்கை மனரீதியாக சீர்குலைந்துள்ளது. கடந்த 5 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு முறையும் குறைந்தது 160 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சொதப்பி விடுகிறார்கள். அந்த அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்களே உள்ளன. இவை அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி சிந்தித்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்டிய வேண்டியது தான். ஆந்த்ரே ரஸ்செல் (42 சிக்சருடன் 406 ரன்) அதிரடி காட்டினாலும் மற்ற வீரர்களும் ஜொலித்தால் தான் சரிவில் இருந்து மீள முடியும். இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story