கிரிக்கெட்

இரட்டை ஆதாயம் பெறுகிறேனா? - தெண்டுல்கர் மறுப்பு + "||" + Do I get double gain? - Tendulkar denial

இரட்டை ஆதாயம் பெறுகிறேனா? - தெண்டுல்கர் மறுப்பு

இரட்டை ஆதாயம் பெறுகிறேனா? - தெண்டுல்கர் மறுப்பு
இரட்டை ஆதாயம் பெறுவது தொடர்பாக, தெண்டுல்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினராகவும், ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார். ஒரே நேரத்தில் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் பொறுப்பு வகிப்பதா? என்று கேள்வி எழுப்பிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குறைத்தீர்ப்பு அதிகாரியான டி.கே.ஜெயின் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் நோட்டீஸ் அனுப்பினார்.


இந்த விவகாரத்தில் தன் மீதான புகாரை மறுத்த தெண்டுல்கர் தரப்பில் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், ‘ஓய்வுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக இருக்கும் தெண்டுல்கர் அந்த அணியிடம் இருந்து எந்தவித நிதிப்பயனையும் பெறவில்லை. மேலும் மும்பை அணியில் அடிப்படை பணியாளராகவோ அல்லது வேறு எந்த பொறுப்பிலோ அவர் நியமிக்கப்படவில்லை. அணித்தேர்வு உள்ளிட்ட மும்பை அணி எடுக்கும் எந்த முடிவிலும் தலையிடுவதும் இல்லை. எனவே இந்திய கிரிக்கெட் வாரிய விதிகளுக்குட்பட்டோ அல்லது வேறு எந்த விதிகளின் படியோ அவர் இரட்டை ஆதாயம் எதையும் அடையவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணும் இதே பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். அவர் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினராகவும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராகவும் உள்ளார். சர்ச்சை எழுந்தால், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று லட்சுமணன் பதில் அனுப்பியுள்ளார்.