உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கம்


உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கம்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 8:21 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து உத்தேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹாலெஸ் இடம் பெற்று இருந்தார்.

இதற்கிடையில் அலெக்ஸ் ஹாலெஸ்சிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் உற்சாக போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவருக்கு 21 நாட்கள் விளையாட தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். எனவே அவர் உலக கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழுவினர் கூடி அலெக்ஸ் ஹாலெஸ் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் அலெக்ஸ் ஹாலெசை உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து நீக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு நாள் போட்டி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் இருந்தும் அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முக்கியமான கட்டத்தில் அணியில் எந்தவித கவனச் சிதறலும் ஏற்படாமல் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டியது அவசியமானதாகும். இங்கிலாந்து அணியின் நலன் கருதி அலெக்ஸ் ஹாலெசை நீக்கம் செய்து கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கத்தின் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக சொல்ல முடியாது. உள்ளூர் போட்டியில் அவர் மீண்டும் கவனம் செலுத்த தேவையான உதவிகள் செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அலெக்ஸ் ஹாலெசுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. வரும் போட்டி தொடரில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜேம்ஸ் வின்ஸ் இந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 வயதான அலெக்ஸ் ஹாலெஸ் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட், 70 ஒரு நாள் மற்றும் 60 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.


Next Story