கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா


கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா
x
தினத்தந்தி 29 April 2019 11:15 PM GMT (Updated: 30 April 2019 12:23 AM GMT)

‘கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்த கொல்கத்தா அணி அந்த தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், 4 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை சாய்த்தது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த இமாலய இலக்கை (233 ரன்கள்) நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களே எடுத்து 5-வது தோல்வியை சந்தித்தது. 40 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்செல் ஆட்டநாயகன் விருது பெற்றார். மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 34 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்சருடன் 91 ரன்கள் சேர்த்தது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில், ‘அதிக நெருக்கடி கொண்ட இந்த ஆட்டத்தில் அதிரடி இருக்கும் என்பது தெரியும். எங்களது செயல்பாடுகள் சரியானதாக அமைந்து வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஸ்செல் எங்களுக்கு சிறப்பு வாய்ந்த வீரர். அவர் இந்த போட்டி தொடரில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நல்ல தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. அத்துடன் நாங்கள் விக்கெட்டுகளை இழந்தது கூடுதல் நெருக்கடியை உருவாக்கியது. கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த வரையில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். எங்களது பவுலர்கள் யார்க்கர், பவுன்சர் என வித்தியாசம் காட்டி நன்றாக பந்து வீசியும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டனர். கிறிஸ் லின், சுப்மான் கில் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். கடைசியில் ரஸ்செல் அபாரமாக ஆடினார். இந்த ஆட்டம் எங்களுக்கு பாடமாகும். எந்த முயற்சியும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இதுபோன்ற இலக்கை நோக்கி ஆடுகையில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் தான் சேசிங் செய்ய முடியும். எங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டம் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யாவுடன் யாராவது ஒருவர் நிலைத்து நின்று விளையாடி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து வரும் ஆட்டங்களில் நாங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாட வேண்டும். தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.


Next Story