ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகள் எது?


ஐ.பி.எல். கிரிக்கெட்: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகள் எது?
x
தினத்தந்தி 30 April 2019 11:30 PM GMT (Updated: 30 April 2019 9:42 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இதுவரை சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி கேப்பிட்டல்சும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்துள்ளன. இன்னும் 7 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் மீதமுள்ள 2 ‘பிளே-ஆப்’ சுற்று இடத்துக்கு 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் அதிக வாய்ப்பில் உள்ளன. 14 புள்ளிகளுடன், வலுவான ரன்ரேட்டும் (+0.347) கொண்டுள்ள மும்பை அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் (மே.2-ந்தேதி ஐதராபாத்துக்கு எதிராக, மே.5-ந்தேதி கொல்கத்தாவுக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். சிக்கலின்றி அடுத்த சுற்றை எட்டிவிடலாம். இரண்டில் தோற்றாலும் ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருந்தால் பிளே-ஆப் கனவு நனவாகும்.

12 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணி தனது கடைசி இரு லீக்கிலும் (மும்பை, பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்றால் கம்பீரமாக பிளே-ஆப் சுற்றை அடையலாம். இவற்றில் ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் ரன்ரேட் (+0.709) அந்த அணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் தலா 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை அடுத்த இரு ஆட்டங்களில் பஞ்சாப், மும்பை அணிகளை அதிக வித்தியாசத்தில் சாய்க்க வேண்டும். அதே சமயம் ஐதராபாத் அணி தனது கடைசி இரு லீக்கில் குறைந்தது ஒன்றில் தோற்க வேண்டும். அப்போது தான் கொல்கத்தா அணியால் 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற இயலும். இதே நிலை தான் பஞ்சாப் அணிக்கும் காணப்படுகிறது.

11 புள்ளியுடன் உள்ள ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் (டெல்லிக்கு எதிராக) கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தங்களது இறுதிகட்ட ஆட்டங்களில் வரிசையாக தோற்க வேண்டும். இவ்வாறு சாதகமான முடிவு அமைந்தால் ராஜஸ்தானுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கலாம். பெங்களூரு அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.


Next Story