கிரிக்கெட்

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார், ஸ்டீவன் சுமித் + "||" + From Rajasthan team, say goodbye to the team, Steven Smith

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார், ஸ்டீவன் சுமித்

ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார், ஸ்டீவன் சுமித்
‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து விளையாடினேன்’ என்ற உருக்கமான பதிவோடு ஸ்டீவன் சுமித் ராஜஸ்தான் அணியில் இருந்து விடைபெற்றார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழை காரணமாக இந்த ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக மாற்றப்பட்டது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது. விராட் கோலி (25 ரன்), டிவில்லியர்ஸ் (10 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்து ராஜஸ்தான் பவுலர் ஸ்ரேயாஸ் கோபால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.


பின்னர் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை பெய்தது. இதனால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. முடிவு கிடைக்காததால் ராஜஸ்தான் அணியினர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். “ஹாட்ரிக் சாதனை படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் ஆட்டம் முழுமையாக நடந்து 2 புள்ளியையும் பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது” என்று சாதனை பவுலர் ஸ்ரேயாஸ் கோபால் குறிப்பிட்டார்.

தற்போது 11 புள்ளியுடன் உள்ள ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் (4-ந்தேதி டெல்லிக்கு எதிராக) வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்ற அணிகளின் முடிவுகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் ஒரு வேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்த ஆண்டு 12 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதத்துடன் 319 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆட்டத்துடன் அவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்காக சொந்த நாட்டுக்கு (ஆஸ்திரேலியா) புறப்பட்டு சென்றார். விடைபெறும் முன்பாக ஸ்டீவன் சுமித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கடந்த 7 வாரங்களாக அங்கம் வகித்த ராஜஸ்தான் அணிக்கு எனது நன்றி. இந்த ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அனுபவித்து உற்சாகமாக விளையாடினேன். அற்புதமான மனிதர்களோடு இந்த ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்தது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. டெல்லியில் நடக்கும் கடைசி லீக்கில் ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் அணிக்கு முதலில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக ரஹானேவுக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இப்போது சுமித் விடைபெற்று விட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் ரஹானே அணியை மீண்டும் வழிநடத்துவார் என்று தெரிகிறது.